பேரினவாத சிந்தனை கொண்டவர்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவின்றி, ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாதென்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முசலி, புதுவெளியில் நேற்று மாலை (07) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், மேலும் கூறியதாவது,

“சிறுபான்மை கட்சிகளின் துணையின்றி நாம் ஆட்சி அமைப்போம் என வீராப்புப் பேசிக்கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகள், பொதுத்தேர்தலின் பின்னர் தமது அறியாமையை அறிந்துகொள்வர். அவர்களின் உள்ளத்தில் நிறைந்துகிடக்கும் இனவாத மற்றும் மதவாத சிந்தனைகளின் வெளிப்பாடாகவே இந்த ஆசையை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், ஒருபோதும் இது நிறைவேறாது. ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்றதைப் போன்று, இந்தத் தேர்தலில் அவர்கள் நினைத்தமாத்திரம் வாக்குகளைப் பெறமுடியாது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், தமது இருப்புக்காக நடத்தும் போராட்டங்களை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஆண்டாண்டு காலமாக அங்கு வாழ்ந்துவரும் முஸ்லிம் சமூகம், அரசியல் ரீதியில் பலமிழந்ததனாலேயே இன்று நசுக்கப்படுகின்றனர். அதேபோன்ற பாணியிலேயே தற்போது இங்கும் சதிகள் அரங்கேறி வருகின்றன. இரண்டு மாதக்காலத்தில் இந்த இடைக்கால – சிறுபான்மை அரசில், சிறுபான்மை சமூகத்துக்கு நடந்தேறிவரும் சம்பவங்கள் நமக்கு எதிர்காலத்தை வெளிச்சம் போட்டுக்காட்டத் தொடங்கியுள்ளது. பொதுத்தேர்தலின் பின்னர், இவர்கள் தனியே நின்று ஆட்சியமைத்துக் கொண்டால் நிலைமை என்னவாகும்?

நமது சமூகம் அனுபவிக்கும் விஷேட உரிமைகள் மற்றும் சலுகைகளை, புதிய சட்டங்களைக் கொண்டுவந்து நசுக்குவதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் பாராளுமன்றில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், பெருந்தலைவர் அஷ்ரப்பினால் தூரநோக்குடன் பெற்றுக்கொடுக்கப்பட்ட 05% சதவீத வெட்டுப்புள்ளியை, 12.5% சதவீதமாக மாற்றுவதற்கான சதி இடம்பெறுகிறது. அதன்மூலம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் தாம் நினைத்தமாத்திரத்தில், சட்டமூலங்களை சட்டங்களாக நிறைவேற்றுவதற்கு ஆமாம்சாமி போடுபவர்களைக் கொண்டு வருவதற்கும் முனைப்புக் காட்டுகின்றனர். குறுகிய காலத்திலேயே இந்த தற்காலிக ஆட்சியில், இவர்களின் பேரினவாத சிந்தனை எப்படி சுழன்றடிக்கின்றது என்பதை நாம் காணமுடிகின்றது.

சிறுபான்மைச் சமூகத்துக்கு கடந்தகாலங்களில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் வரும்போது களத்தில் நின்றவர்கள் யார்? காடையர்களால் கடைகளும் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு, பேரழிவும் உயிர்பலியும் இடம்பெற்றபோது, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையையும் தட்டிக்கேட்டது யார்? காடைத்தனத்தை தொடரவிடாமல் தடுத்து நிறுத்தியவர்கள் யார்? பேரினவாதத்துக்கு கூஜாதூக்கும் நமது சமூகத்தைச் சேர்ந்த முகவர்களும் ஏஜெண்டுகளும், எப்போதாவது கண்டி, திகன, அழுத்கம, கின்தொட்டைக்குச் சென்று களத்தில் நின்றிருக்கின்றார்களா? அற்பசொற்ப சுயலாபங்களுக்காக சமூகபலத்தை பிரிக்கத் துணைபோகும் இந்த முகவர்கள், அப்போது எங்கே போனார்கள்?” என்று கேள்வியெழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *