இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் அதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். உக்ரைன் நாட்டு வர்த்தகத் தூதுக்குழு ஒன்று அண்மையில் அமைச்சரைச் சந்தித்து இலங்கை – உக்ரைன் வர்த்தக உறவு பற்றியும், இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்

சுமார் இரண்டு தசாப்தகாலம் இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால நெருக்கடிகளால் பல்பக்க வர்த்தகத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருந்தது. அத்துடன் இலங்கையின் உல்லாசப்பயணத் தொழிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இலங்கையின் அந்நியச்செலாவணியில் வீழ்ச்சி ஏற்பட்டு இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில் இந்த நாடு படிப்படியாக பொருளாதாரத்தில் மீட்சிபெற்று குறித்த இலக்கை அடைவதற்கான முயற்சிகளில் பிரயத்தனம் செய்துவருகின்றது.

இலங்கை முதலீட்டுத் துறைக்கு வளமான இடம், கைத்தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளை நவீன முறையில் வளப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு முதலீட்டளர்கள் இலங்கையின் முதலீட்டுத் துறையில் ஈடுபாடு காட்டினால் இரண்டு சாராருக்கும் நன்மை கிடைக்கும்.

உக்ரைன் நாட்டை பொறுத்தவரையில் விவசாயத் துறையில் ஆர்வம்கொண்ட நாடு. நவீன யுத்திகளைப் பயன்படுத்தி இந்தத் துறையில் அவர்கள் முன்னேற்றம் கண்டு வருகிறன்றனர். எனவே இங்கு வந்து தாராளமாக முதலீடு செய்ய முடியும். உலகிலே தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு மிகுந்த நாடாக இலங்கை திகழ்கின்றது என்பதை நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *