இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

 

 
இலங்கை வந்துள்ள அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் அமெரிக்க உதவிச் செயலாளர் டொம் மலி நவ்ஸ்கியும் பங்கேற்றிருந்தார்.

 

 
யுத்த முடிவுக்குப் பின்னர் இலங்கையின் தீர்வு முயற்சியில் சர்வதேசம் அக்கறைகாட்டி வருகின்றது. இந்த நாட்டிலே இனப்பிரச்சினையின் விளைவாக இங்கு வாழும் இன்னொரு சமூகமான முஸ்லிம் சமூகமும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. இந்த விடயங்களை இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

 

 
வடமாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் அவர்கள் தமது தாயகத்தில் இன்னும் மீளக்குடியேற்றப்படவில்லை. இவர்களைப் பற்றி சர்வதேசம் எந்தவிதமான அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை. நானும் ஒரு அகதியே. இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படவர்களில் நானும் ஒருவன். எனவே இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். யுத்தத்தினால் வடமாகாணம் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களுமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வகையில் இவர்களுக்கும் பொருத்தமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

 

 
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சுமேந்திரன் எம்.பி, டக்லஸ் தேவானந்தா எம்.பி அமைச்சர்களான டிலான், சுசில் பிரேமஜயந்த, உப சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *