மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நாம் எத்தனையோ அரசியல்வாதிகளிடம் எடுத்துரைத்தும் இற்றைவைரை எதுவுமே நடக்கவில்லை. எனவே நீங்களாவது எமது பிரச்சினைகளை கருத்தில் எடுத்து இந்தப் பிரதேச மக்களுக்கு உதவுங்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் மூதூர்புத்தி ஜீவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

 

 

மூதூருக்கு விஜயம் செய்த அமைச்சரை சந்தித்த தென்கிழக்கு பல்கலைக்கழக மூதூர்ப்பட்டதாரிகள் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்களே இந்த உருக்கமான கோரிக்கையை அவரிடம் விடுத்தனர்.

 

 

“எமக்கென்று ஓர் அரசியல் தலைமை இல்லை, நாம் நம்பியிருந்தவர்களும் கை கொடுக்க மறுக்கிறார்கள். வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கிறார்கள். உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் காற்றிலே பறந்து வருகின்றன” என்று தெரிவித்த அவர்கள் அரசின் சக்தி மிக்க அமைச்சரான , சமுதாயத்தின் மீது பற்றுக்கொண்ட, நீங்களாவது எமது பிரச்சினைகளைக் கவனத்தில், கொள்ள வேண்டும் என அன்பாய் வேண்டிக் கொண்டனர்.

 

 

மூதூர் 561 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டது. ஓரிலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இங்கு அமைந்துள்ள வைத்தியசாலை மூதூர், தோப்பூர், சேருவில, ஈச்சிலம் பற்று, மக்களின் ஒரு பிரதான சொத்து. அவர்களின் பிணி தீர்க்கும் மையமாக இந்த வைத்திய சாலை உள்ளது. சுமார் 20, 24 கிலோ மீற்றர் தூரத்திலிருந்தும் இந்த வைத்தியசாலைக்கு நோயாளிகள் வருகின்றனர். பொதுவாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களே இந்த வைத்தியசாலையை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

 

 

1972 ஆம் ஆண்டு முதல் மாவட்ட வைத்தியசாலையாக இருந்து 2006 ஆம் ஆண்டு தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதும் இந்தப் பத்து வருடங்களில் தரமான வைத்தியசாலையாகவோ தள வைத்தியசாலைக்குரிய இலட்சணத்தையோ இந்த வைத்தியசாலை கொண்டிருக்கவில்லை.

 

 

“நோயாளார்கள் படுகின்ற அவதிகள் ஏராளம், வைத்தியசாலைக்கு அருகாமையில் வாழும் மக்களில் அநேகர் வறுமைக் கோட்டின் கீழே தான் வாழ்கின்றனர். எந்த அரசியல்வாதியும் எமது வைத்தியசாலைக் குறைபாடுகளை உயர்மட்டத்திற்கு எடுத்து செல்லவில்லை. ஏதாவது கவன ஈர்ப்புப் போராட்டங்களை நாம் நடாத்தினால் மட்டுமே இங்கு வருவார்கள். அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி மொழிகள் தருவார்கள். அத்துடன் அது முடிவடைந்து விடும்.”

 

 

”வைத்தியர்கள் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக மயக்க மருந்து வழங்கும் வைத்தியர்கள் (அனிஸ்தீசியா) அறவே இல்லை. இதனால் மகப்பேற்று வைத்திய நிபுணர், அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் தமது கடமைகளை மேற்கொள்ள முடியாது திண்டாடுகின்றனர். மாதாந்தம்  60 – 80 மகப்பேறுகள் இடம்பெறும் இந்த வைத்தியசாலையில் மயக்கமருந்து வைத்தியர் இல்லாமையால் ‘சிசரியன்ஸ்’ மேற்கொள்ள வேண்டிய கர்ப்பிணித் தாய்மார்கள் திருமலை செல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகின்றது..” இதனால் சிசு மரணங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் அநேகம்.

 

 

இதை விட மூதூர்த் தள வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளால் நோயாளிகள் பெரிதும் கஷ்டமடைகின்றனர். எனவே இந்த விடயங்களை சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து இதனை நிவர்த்திப்பீர்களென நாம் பெரிதும் நம்புகின்றோம் என்று அவர்கள் கோரினர்.

 

 

இந்த சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,

 

 

மூதூர் மக்கள் படுகின்ற அவஸ்தைகளை நான் அறிவேன். யுத்த காலத்தில் உடுத்த உடையுடன் மூதூரிலிருந்து நீங்கள் உயிரைக்கையில் பிடித்து ஓடி வந்த போது நான் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்தேன். உங்களுக்கு உதவி செய்ய ஓடோடி வந்தேன். மீண்டும் உங்களைக் குடியேற்ற உதவினேன். அகதி வேதனையை நானும் அனுபவித்ததனால் உங்களின் வேதனையை அன்று என்னால் உணர முடிந்தது.

.

 

காலங்காலமாக மூதூர் மூதூர் மக்களாகிய நீங்கள் அரசியல் ரீதியில் மேற்கொண்ட முடிவுகள் தான் உங்கள் ஊரின் இந்தப் பின்னடைவுக்கு காரணம். இதை நீங்கள் இனியாவது உணர்ந்து கொண்டால் போதும். உங்கள் பிரதேசம் முன்னேற வேண்டுமானால் நீங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து சரியான அரசியல் பாதையை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *