ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கம் நேர்மையான பாதையில் பொருளாதார உறவுகள் முன்னெடுக்கும் என்பது உறுதி. இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நிலை இரு நாடுகளுக்குமிடையிலான பல்தரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும்; இந்நிலையில் இவ் இருவரின் தலைமையின் கீழ் ‘இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு’ தமது வர்த்தக செயற்பாடுகளினை நகர்த்துவது இந்தியா அதன் ஏற்றுமதி மற்றும் ஏனைய முக்கிய சந்தை வாய்ப்புகளினை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வழிமுறையாகும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பினரின் கண்காட்சி நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனங்களின் தலைமை அமைப்பாக விளங்கும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு முதல் முறையாக இந்திய பல்துறை உற்பத்திகளினை காட்சிப்பபடுத்தி இந்திய எக்ஸ்போ கண்காட்சியினை கொழும்பில் நடத்துகின்றது.

இவ் இந்திய எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்; அரிந்தம் பக்சியும் கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இலங்கையின் பல்வேறு வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சம்மேளனங்களுடன் பங்குதாரராகுவதை நாம் வரவேற்கிறோம். அயல் நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை பேணுவது என்பது எமது வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவமானதாகும். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயலாற்றுவதற்கான சந்தர்ப்பமாக அரசியல் மாற்றம் காணப்படுகிறது. இலங்கை -இந்திய வருடாந்த வர்த்தகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஈட்டியுள்ளது. இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இந்திய-இலங்கை ஒட்டுமொத்த இருதரப்பு வர்த்தகத்தினை 2012 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டு 11% சத வீதமாக சரிந்ததுள்ளது. ஆனால் ஒரு புதிய வளர்ச்சியுடன் 2014 ஆம் ஆண்டில் வருடாந்த மொத்தம் வர்த்தகம் 27% சத வீத வளர்ச்சியுடன்; 4.6 பில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை 2015 ஆம் ஆண்டு ஜனவரி-ஜுன் மாதம் வரையிலான இருதரப்பு வர்த்தகம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு கொழும்பில் முதன் முறையாக இந்திய பல்துறை உற்பத்திக்களை காட்சிப்படுத்துகின்றதையிட்டு நாங்கள் பெருமையடைகின்றோம். இந்திய எக்ஸ்போ என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த ஆரம்ப நிகழ்வில் 50 க்கும் அதிகமாக இந்திய நிறுவனங்கள்; பல்வேறு பொருட்களை இலங்கைச் சந்தையில் ஏற்றுமதி செய்வதற்கு அவர்களின் திறன்களினை வெளிப்படுத்தும்.

இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் மீது இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இப்போது உலக வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகுதிகளில் மொத்த கொள்கலன்களில் நான்கில் மூன்று பகுதி இணைக்கப்பட்ட இந்திய சரக்கு கொழும்பு துறைமுகத்தில் காணப்படுகின்றன. அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள பாரம்பரிய மேற்கத்திய சந்தைகள் மெதுவாக நகர்கின்றமை அவதானிக்கப்படுகிறது. ஆசியாவில் வளர்ந்து வரும் சந்தைகளில் இந்திய ஏற்றுமதிகளை விரிவாக்குவதற்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கப்பபடும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் பிராந்தியத்திற்கான தலைவர் ஏ. சக்திவேல் தெரிவித்தார்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ,இலங்கை கைத்தொழில் சம்மேளனம், தேசிய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் இலங்கை சிறிய நடுத்தர சம்மேளனம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்திய எக்ஸ்போ நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *