பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
கெளரவ சபாநாயகர் அவர்களே, இன்று கெளரவ பிரதம அமைச்சரினால் பிரேரிக்கப்பட்டு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து கெளரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் ஆமோதிக்கப்பட்டுச் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட உங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் உங்களுடைய கட்சிக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சார்பாகவும் நான் இந்த இடத்தில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தப் பாராளுமன்றத்தின் மூலம் ஒரு தேசிய அரசாங்கத்தை நிறுவும் நோக்கில் ஜனாதிபதியும் பிரதம அமைச்சரும் தங்களுக்கிடையில் இருக்கின்ற நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்திருக்கின்றார்கள். அதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் கொடுக்கும்வகையில் அவர்களுடன் எனது கட்சி பங்காளியாகச் சேர்வதற்கும் தீர்மானித்திருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல், அவர்கள் இருவரும் எவ்வாறு ஒன்றுசேர்ந்து செயற்பட்டு இந்த நாட்டுக்காகப் பாடுபட இருக்கிறார்களோ, அதேபோல கடந்த காலங்களில் யுத்தத்தினாலும் கருத்துக்களினாலும் பிளவுபட்டு தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றும் பெளத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர், இஸ்லாமியர் என்றும் பிரிந்திருக்கின்ற உள்ளங்களையும் ஒன்றுசேர்க்கின்ற, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றக்கூடியதாக இப்பாராளுமன்ற உறுப்பினர்களும் திகழவேண்டும்.
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் குறித்து இங்கு சிலர் பேசினார்கள். அவ்வாறானதொரு திருத்தத்தைக் கொண்டுவரும்பொழுது, இங்கிருக்கின்ற சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களுடைய பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கக்கூடியதாக அது அமைவதற்கு நீங்களும் பக்கபலமாக இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். கடந்த காலத்திலே எங்களுடைய நாட்டில் ஏற்பட்ட 30 வருட கால பாரிய யுத்தத்தினால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள்; அதை நாங்களும் அனுபவித்தோம். தற்பொழுது, சமாதானம் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த வருடங்களில் பெளத்த – முஸ்லிம் மக்கள் மத்தியிலே ஒரு பாரிய இனக்கலவரத்தைத் தூண்டி, இன்னோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழியமைத்த இனவாதக் கட்சியை இந்த நாட்டிலுள்ள பெளத்த மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள்.
பெளத்த மக்கள் இனவாதிகள் அல்லர் என்பதை அதனூடாக நிரூபித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த உயர் சபையிலே விசேட நன்றியைக் கூறிக்கொள்கின்றேன். அத்துடன், இங்கே அமர்ந்திருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் 225 பேரும் ஒன்றுசேர்ந்து, நாட்டுக்காக இந்தத் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கின்ற நல்ல விடயங்களுக்குப் பக்கபலமாக இருக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்வதோடு, என்னுடைய கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் கட்சிக்கு வாக்களித்த மக்கள் சார்பாகவும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களைக் கூறி, விடைபெறுகின்றேன்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *