இனவாதத்தை தூண்டும் பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு
வில்பத்து வனப் பாதுகாப்புப் பிரதேசத்தில் நான் அத்துமீறி மக்களுக்கு காணிகளை வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் கடந்த சில வாரங்களாக சிங்கள ஊடகங்களில் சுமத்தப்பட்டு வருகின்றன. எனவே, இது குறித்து விசாரணை செய்து உண்மையை பகிரங்கப்படுத்த ஆணைக்குழு ஒன்றை அமைக்கும்படி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன் என்று வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
வில்பத்து வனப்பாதுகாப்புப் பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் இவற்றுடன் தன்னையும் தொடர்புபடுத்தி சில ஊடகங்கள் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், இது குறித்து உண்மை நிலையை அறிந்துகொள்ள ஊடகவியலாளர்களை அப்பகுதிக்கு அழைத்துச் செல்லத் தயார் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது,
வில்பத்து வனப் பாதுகாப்பு பிரதேசத்தை அழித்து முஸ்லிம்களை அங்கு கொண்டுபோய் குடியமர்த்துவதாக கடந்த சில வாரங்களாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அத்துடன் வெளிமாவட்ட முஸ்லிம்களை மட்டுமன்றி பாகிஸ்தான் போன்ற வேறு நாட்டிலுள்ள முஸ்லிம்களையும் இங்கு குடியமர்த்துவதாகவும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கடந்த இரண்டு வாரங்களாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இதன்மூலம், இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் வில்பத்து வனப் பாதுகாப்புப் பிரதேசத்தை அழித்து நாசமாக்குகின்றனர் என்பதனைக் காட்ட முனைகின்றனர். தமது நலனுக்காக பொக்கிஷமாக பாதுகாத்து வரப்படும் வில்பத்து வனப் பாதுகாப்புப் பிரதேசத்தையும் அங்குள்ள விலங்குகளையும் அழித்து வருகின்றனர் என்று காட்டி முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறுதான், கடந்த காலங்களில் ஹலாலுக்கு எதிராக செயற்பட்டு முஸ்லிம்கள் சம்பந்தமான உணவுப் பிரச்சினையினைக் கொண்டு வந்திருந்தனர். அதேபோல், முஸ்லிம் பெண்களுடைய உடை தொடர்பாகவும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பள்ளிவாசல்களுக்கு எதிராகவும், மதரசாக்களுக்கு எதிராகவும், எமது புனித குர்ஆனுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதேபோல், நபி (ஸல்) அவர்களுக்கு உருவத்தை கொடுத்தும், மிருகங்களின் பெயர்களை வைத்தும் இஸ்லாத்தை அவமதித்தார்கள். இவ்வாறு மிகவும் கேவலமான காலகட்டமாக கடந்த இரண்டு வருடம் காணப்பட்டது. மஹிந்த ராஜபக் ஷ அரசாங்க காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றபோது, இதனை தடுக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்குமாறும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவன் என்ற வகையில் நானும் ஏனைய பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அந்த விடயங்களை கட்டுப்படுத்த முன்னைய அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அளுத்கமவில் இடம்பெற்ற இனவாத கலவரத்தை யாரும் மறக்கமுடியாது. பல உயிர்கள் பலியாகின, சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் வாழமுடியுமா? என்ற கேள்வியை அளுத்கம சம்பவம் ஏற்படுத்தியது. இதனால்தான் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் எண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, மைத்திரிபல சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் 99 சதவீதமான முஸ்லிம்கள் ஒன்றுபட்டு அவரது வெற்றிக்காக உழைத்தனர்.
ஆனால் தற்போது, முஸ்லிம்கள் வில்பத்துக் வனப் பாதுகாப்புப் பிரதேசத்தை அழிக்கின்றார்கள் என்று பொய்பிரசாரம் மேற்கொள்ளப்படுவது ஒரு திட்டமிட்ட சதியாகவே கருதவேண்டியுள்ளது. முஸ்லிம்கள் வனப் பாதுகாப்புப் பிரதேசத்தை அழிக்கின்றார்கள், இதனை தடுக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற கருத்தை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். வனப் பாதுகாப்புப் பிரதேசத்தை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்றும் பொறுப்பை நான் ஏற்றுள்ளதாகவும் என்மீது அபாண்டமாகப் பழி சுமத்துகின்றார்கள். இது எனக்கு எதிரான பிரசாரமல்ல. எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரமாகவும், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரமாகவுமே காணப்படுகின்றது.
வடமாகாணத்திலிருந்த ஒரு இலட்சம் முஸ்லிம் மக்கள் ஒரு சில மணித்தியாலங்களில் வெளியேற்றப்பட்டனர். ஆனால், நான் அமைச்சராக இருந்தபோது மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தபோது, அவர்களை அரவணைத்து மெனிக்பாம் முகாம்களில் தங்கவைத்தேன். அதுமட்டுமில்லாமல் மலசலகூடம், மின்சாரம், குடிநீர், உணவுப்பொருட்கள் என பலவகையான உதவிகளைச் செய்து கொடுத்திருந்தோம். குறுகிய காலத்தில் மிதிவெடிகளை அகற்றி மக்களை மீள் குடியேற்றியிருந்தோம். இவ்வாறு பல வேலைத் திட்டங்களை தமிழ் சகோதரர்களுக்காக செய்து கொடுத்திருந்தேன்.
யுத்தத்தால் வெளியேறிய முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்களில் முதன்முதலாக தமிழர்களை மீள்குடியேற்றம் செய்துவிட்டு சிங்கள, முஸ்லிம் மக்களை பின்னர் குடியமர்த்த திட்டமிட்டிருந்தோம். இருந்தும், துரதிஷ்டவசமாக மீள்குடியேற்ற அமைச்சை விட்டு வேறொரு அமைச்சுப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டதால், முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மீள்குடியமர்த்த முடியாமல் போய்விட்டது. இன்றுவரை முற்றுமுழுதாக வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப் படவில்லை. இருந்தும், நான் மற்றொரு அமைச்சுப் பொறுப்பை ஏற்றாலும் மனிதாபிமான ரீதியில் இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய முன்வந்தால் அபாண்டமான குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்படுகின்றன. நான் வெளிமாவட்ட முஸ்லிம்களை திட்டமிட்டு இப் பிரதேசத்தில் குடியேற்றுவதாகவும் என்மீது திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. நான் வெளிமாவட்ட முஸ்லிம்களை வடக்கில் குடியேற்றியுள்ளேன் என்பதை நிரூபித்தால் நான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என சவால் விடுக்கின்றேன்.வில்பத்து வனப் பாதுகாப்புப் பிரதேசத்தில் தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ குடியமர்த்தப்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வில்பத்து வனப் பாதுகாப்புப் பிரதேசத்தில் ஒரு அங்குலமாவது அழிக்கப்படவில்லை. அங்கு மக்கள் குடியேற்றப்படுவதாக பொறுப்பற்ற வகையில் இன்று சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை உண்மைபோன்று திரித்துக்காட்டி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஊடக தர்மத்தை அவர்கள் மதிக்க வேண்டும்.” இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
–எஸ்.கணேசன்