– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

சமூக சிந்தனையும் தற்றுணிவும்கொண்ட ஒரு கல்விமானை எமது சமூகம் இழந்து நிற்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார்.

முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரும் நாடறிந்த கல்விமானுமாகிய எம்.எம்.சியான் அவர்களின் மறைவு தொடர்பில், அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“கல்வியையே தன்னுடைய வாழ்க்கையாகக்கொண்ட மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள், மன்னார், தாராபுரத்தை பிறப்பிடமாகக்கொண்டவர்.

சியான் அவர்கள் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய காலமானது ஒரு பொற்காலமாகும். இந்தக் காலத்தில், இவரிடம் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் இன்று சிறந்த நிலையில் காணப்படுகின்றனர்.

இயற்கையாக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடையான, எவ்விடத்திலும் தான் ஒரு கல்விமான் என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு துணிந்து, தமது கருத்துக்களை வெளியிடும் ஆற்றலைக் கொண்டிருந்ததுடன், தரவுகளையும் சட்டென சமர்ப்பிக்கும் ஒருவராகவும் மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்களைக் கூறமுடியும்.

குறிப்பாக, இடப்பெயர்வுக்கு பின்னர், இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மிகவும் நெறிப்படுத்தி, அதனை முன்கொண்டு செல்வதிலும், பல நுறு ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுப்பதிலும் எம்முடன் இணைந்து, அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் பணியாற்றிய காலத்தை, இத்தருணத்தில் நாம் நினைவுகூர்வது பொருத்தமாகும்.

நான் பிறந்த மண்ணான தாராபுரத்தை சேர்ந்த ஒருவரான மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள், எனது நெருங்கிய உறவினருமாவார். கடந்த காலங்களில், எமக்கு ஏற்பட்ட பலவித துன்பங்களின்போது, எமது நலனில் அக்கறையுடன், அடிக்கடி தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய தருணங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.

எமது ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களில் முக்கியமான ஒருவராக மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள் திகழ்ந்துள்ளார். அதேபோன்று, சமூகம் மற்றும் கல்வி சார்ந்த விடயங்களை முற்படுத்தி, அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ‘எவ்வாறு இந்த அடைவுகளை அடைந்துகொள்வது’ என்பது பற்றி பல நல்ல ஆலோசனைகளை வழங்கியவராகவும், நோயுற்றபோதும் அந்த எண்ணம் தொடர்ந்தும் அவரிடம் நீடித்தமையானது, இன்றும் பசுமரத்தாணிபோல் என் மனதில் மீட்டி நிற்கின்றது.

‘கற்பவனாக இரு அல்லது கல்விக்கு உதவி புரிபவனாக இரு’ என்கின்ற பழமொழிக்கு ஒப்ப, மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள் நீண்ட கல்விப்புலத்தை கொண்டிருந்தமை, கற்கின்ற சமூகத்திற்கு உந்துதலாக இருந்ததை இன்றும் நாம் நினைவில்கொள்கின்றோம்.

தாம் பெற்ற கல்வியின் மூலம், அரசியல் உந்துதல்களின்றி பொறுப்பான பதவிகளை அவர் பெற்றுக்கொண்டார். குறிப்பாக, புத்தளம் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளராக இருந்து, உள்ளூர் மாணவச் சமூகத்திற்கும், அதேபோன்று, இடம்பெயர்ந்து வந்த மாணவர்களின் கல்விக்காகவும் வளங்களைப் பெற்று, அதனூடாக தமது கல்வியின் இலக்கை நோக்கிப் பயணத்தை முன்னெடுத்த காலத்தை என்றும் மறக்க முடியாது.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் சேவைகளைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அருள்வானாக! ஆமீன்!!!”

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *