இலங்கையின் மூத்த உலமாவும் புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு, ஆன்மீகத் துறையில் பெரும் இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் உயர் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“ஆன்மீக சமூகத்தை உருவாக்குவதற்காக அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் முழுமையான பங்களிப்பை செலுத்தியுள்ளார். இலங்கையில் பழைமை வாய்ந்த அரபு மதரஸாக்களில் ஒன்றான காசிமியா அரபுக் கல்லூரியின் அதிபராக நீண்ட காலம் பணியாற்றி, சிறந்த உலமாக்களையும் துறை சார்ந்தவர்களையும் இந்த சமூகத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ள ஒருவராக அவரை அடையாளப்படுத்த முடியும்.
ஆன்மீகத் துறையோடு மட்டும் தன்னுடைய பணியை நிறுத்திவிடாது, சமூகம் சார்ந்த எல்லா துறைகளிலும் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள், அவரது பங்களிப்பினை குறையின்றி வழங்கியுள்ளதை நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.
அரசியல், கல்வி, பொருளாதாரம், இன ஒற்றுமை போன்ற விடயங்களில், மிகவும் ஆரோக்கியமான முறையில் அவரது பங்களிப்பை வழங்கியமை, இந்த புத்தளத்து மக்களுக்கு அவரால் ஆற்றப்பட்ட மிக உயர்ந்த பங்களிப்பாகும்.
அவரது காலப்பகுதியில், காசிமியா அரபுக் கல்லூரியின் நாமத்தை முழு உலகறிய செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அளப்பரியது. அதிலும் குறிப்பாக, காசிமியாவின் ஸ்தாபகரும் அதிபரும் அவரது தந்தையுமான மஹ்மூத் ஹசரத் அவர்களுக்காக, நினைவு முத்திரை ஒன்றை அரசாங்கத்தினால் வெளியிட்டு வைப்பதற்கான அடித்தளத்தையிட்டது மட்டுமல்லாமல், அவற்றை வெளியிடுவதற்கு எம்முடைய பங்களிப்பையும் பெறுவதில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்ட ஒருவர்.
குறிப்பாக, இன ஒற்றுமையை ஏற்படுத்துவதில் நடுநிலையாக சிந்திக்க கூடியவராகவும் பிரச்சினைகளை மிகவும் சாதுரியமாகத் தீர்த்து, மீண்டும் அனைத்து மக்களும் அன்புடன், பரஸ்பர புரிந்துணர்வுடன் செயலாற்றுவதற்கான இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர். அவரது சமூகப்பற்றை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களுடைய இழப்பானது, புத்தள சமூகத்துக்கு மிகவும் நீண்ட இடைவெளியினை தோற்றுவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன், அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அன்பையும் கருணையையும் பொழிய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.