(எ.எச்.எம்.பூமுதீன்)
பதுளை பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடன் ஸ்தலத்துக்கு விரைந்து சம்பந்த பட்டவர்களை கைது செய்வதிலும் துரித கவனம் செலுத்தினார்.
இதற்கமைய . ஒருவர் கைது செய்யபட்டதுடன் மூவரைத்தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
பொலிசாரின் அசமந்தப் போக்கே இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வதற்கு காரணம் என அமைச்சர் அதன்போது பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.
பதுளை ஜூம்ஆ பள்ளிவாசல், அல்-அதான் பாடசாலை மற்றும் மூன்று முஸ்லிம் வரத்தக நிலையங்கள் மீது நேற்று அதிகாலை கல்வீச்சுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளிவாசல் ,வர்த்தக நிலையங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
முச்சக்கர வண்டியில் வந்த நான்கு பேர் பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்செல்லும்போது அருகில் நின்றவர்கள் இவர்களை அடையாளம் கண்டு பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இவர்களைத் துரத்திச் சென்ற பொலிசார் இவர்களை பிடிக்காமல் விட்டதாக பொலிசார் மீது பிரதேச வாசிகள் குற்றம் சுமத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்..
இத்தாக்குதல் தொடர்பில் அறிந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடம்பெற்ற பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பொலிஸ்மா அதிபருடன் உடனடியாக தொடர்பினை மேற்கொண்டு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை பிரதேச வாசிகளால் அடையாளங்காணப்பட்ட போதிலும்கூட, இதுவரை அவர்கள் கைது செய்யப்படாதது பொலிசாரின் அசமந்தப் போக்கே காரணம் என்றும் அமைச்சர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
இந் நாசகார சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கப்படுவதுடன் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை உறுத்திப்படுத்துமாறும் அமைச்சர் பொலிஸ்மா அதிபரை பணித்தார்.
இதன் பின்னர் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கலப்பதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரயாணம் செய்த முச்சக்கர வண்டியின் இலக்கத்தை வழங்கி உடன் அவர்களை கைது செய்யுமாறும் கடுமையாகக் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து துரித கதியில் செயற்பட்ட பொலிஸார் ஒருவரை கைது செய்ததுடன் மூவரைத்தேடி வலைவீசியுள்ளனர்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் , ஹசன் அலி எம்.பி., அஸ்லம் எம்.பி, வை.எல்.எஸ்.ஹமீட், நிசாம் காரியப்பர் போன்றோரும் உடன் சென்று இருந்தனர்