“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கி, அவற்றை பெரிய அளவிலான நிலையான வணிக நிறுவனங்களாக மாற்றி,   ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்குகாக 3.2 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொழில் முயற்சி ஆய்வினை நடாத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக நிதி ஆதரவுகளை விரிவுபடுத்தியதற்காக, ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக சூழலை உருவாக்குவதற்கான சட்டம் மற்றும் நிறுவன ஆய்வு குறித்த இரண்டாவது வரைவு அறிக்கை கையளிப்பு மற்றும் சரிபார்க்கும் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவ் அறிக்கை கையளிப்பு மற்றும் சரிபார்க்கும் அமர்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக, அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஏ.தாஜுதீன், தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்   தக்ஷிதா போகொல்லாகம,   Ernst & Young நிறுவனத்தின் சிரேஷ்ட பங்குதாரர் அர்ஜுன ஹேரத், இலங்கைக்கான ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதி ஹசித விஜேசுந்தர மற்றும் அமைச்சின் ஏனைய நிறுவனங்கள் உட்பட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இவ் அமர்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இந்த ஆய்வானது மூன்று அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. அவை இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் தொடர்புடைய தற்போதைய வர்த்தக சூழல் மற்றும் இந்தத் துறைக்கு ஆதரவு வழங்கும் நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒழுங்குமுறை கட்டமைப்பு ஆகும். முன்னோடியான இந்த தேசிய ஆய்வில், வணிகத் துறைக்கு சேவை செய்யும் 20 அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழ் நிறுவப்பட்ட 90 க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அதிகாரசபைகள் மற்றும் கவுன்சில்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆய்வினுடைய சட்ட ஆய்வில் 15 க்கும் குறைவான அம்சங்களில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பொருந்தும் சட்டங்களும் விதிகளும் அடங்குகின்றன..

இலங்கையில் ஒரு மில்லியன் பதிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இவை மூன்று மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. பதிவு செய்யப்படாத சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை எடுக்கும்போது எண்ணிக்கை  அதிகமாக இருக்கும். 40% சதவிகிதத்திற்கும் அதிகமாக வேலைவாய்ப்பை வழங்கி, எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% சதவீதத்தினை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன.

70% சதவீதத்திற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டில் 20% சதவீதமான ஏற்றுமதிகள் இந்த நிறுவனங்களிலிருந்து வந்தன.

எமது பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  அபிவிருத்திக்காக தேசிய கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த நாம் செயலாற்றினோம். இலங்கையில் முன்னோடியான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின கொள்கை மற்றும் கல்வி தொடர்பில், சமீபத்தில் இலங்கையில் முதல் முறையாக UNESCO-APEID அமைப்பினரின்  நிகழ்வானது, தொழில்முனைவோரை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்டது. இது தொழில்முனைவோருக்கான ஒரு மைல்கல் நிகழ்வாகும்

இன்றைய மதிப்பீட்டு ஆய்வில் அடங்கிய அனைத்து முயற்சிகளும், சர்வதேச சந்தைகளில் நமது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை இணைக்க, கூட்டு   அரசாங்கத்தின் சீர்திருத்தத்தின் தொலைநோக்காகும். இந்த ஆய்வுகளின் முக்கிய பரிந்துரைகளில், தொழில் அபிவிருத்தி செயற்பாட்டில் உள்ள தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை, சிறுதொழில் அபிவிருத்தி தொழில் நிறுவனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகிய மூன்று சிறந்த நிறுவனங்களும் முக்கிய பங்கு வகித்தன என்றார் அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *