கிருஷ்ணி இஃபாம் –
பொதுபலசேனா அமைப்பினால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக அளுத்கம, பேருவள பிரதேசங்களில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு முழு சர்வதேசத்தையே அதிரவைத்துள்ளது. திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதலால் அப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், மற்றும் உடமைகள் பெருமளவு தேசப்படுத்தப்பட்டுள்ளதுடன் நமது சகோதரர்களின் விலைமதிப்பற்ற உயிர்களும் காவு கொள்ளப்பட்ட துர்ப்பாக்கிய சம்பவம் நமக்கெல்லாம் பேரதிர்ச்சியையும் தந்துள்ளது.
பொது பல சேனா அமைப்பு உடனடியாக தடைசெய்யப்படவேண்டும், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும், இன வாதம் மற்றும் மதங்கள் தொடர்பில் பேசுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் உடனடியாக அமுழுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என சகல அரச உயர்மட்ட தரப்பினரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவம் குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்:
முஸ்லிம்கள் மீதான தாக்குதலை சர்வதேசத்திற்கு எத்திவைத்தேன்…… அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை காடையர்கள் கட்டவிழ்த்து விட்ட நேரத்தில் நான் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தேன் அப்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சொத்து இழப்பு மரணங்கள் காயப்பட்டோர் போன்ற களநிலரவத்தை அரப் நியூஸ் உட்பட சர்வதேச ஊடகங்களுக்கும் சர்வதேச முஸ்லிம் அரசியல் பிரதிநிகளிடமும் எத்திவைத்ததன் பிரதிபலனே இன்று இலங்கை முஸ்லிம்களின் விடயம் சர்வதேசத்தை எட்டியுள்ளது என்றார்.
ஜனாதிபதிக்கும் ரிஷாட்க்கும் இடையே கடும் வாக்குவாதம்
இது தவிர கடந்ந வியாழன் (19) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துக்கொண்ட அமைச்சரவை கூட்டத்தில் அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அமைச்சர் உணர்ச்சி வசப்பட்டு ஜனாதிபதியை நோகடித்து விட்டார்.இறுதியில் இவ்வாக்குவாதத்தில் ஜனாதிபதி அமைச்சர் ரிஷாடை நோக்கி ‘நீ ஒரு இனவாதி மதவாதி உமது பேச்சை கொஞ்சம் அடக்கி வாசி’ என்றளவுக்கு வந்துவிட்டது.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் பல கோடி கணக்கில் இழப்புக்களை சந்தித்துள்ளனர்!
கடந்த புதன் (18)கிழமை அதிகாலை சவூதியிலிருந்து தமது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய அமைச்சர் பேருவளை மற்றும் அளுத்கம பகுதிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்தே நேரடியாகவே சென்று பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டுதாக்குதலினால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள், சொத்து இழப்புக்கள் தொடர்பில் நீதியை பெற்று தருவதாக அம்மக்களுக்கு உறுதி மொழியளித்தார்.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரனைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் தொடர்பிலும்ஜனாதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தியுள்ளார்.
பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைகளும் சொத்து அழிவுகளுக்கும் பொது பலசேனாவின் ஞானசார தேரர் பொறுப்பேற்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வேதனையும் வெட்;கமும் அடைகிறேன். அளுத்கம மற்றும் பேருவளை பிரச்சினைக்கு இந்நாட்டில் தீர்வு கிடைக்காவிடின் சர்வதேசத்தை நாடவும் பின்னிக்கப் போவதில்லை.
ஞானசார தேரர் ஒரு மிகப்பெரும் பயங்கரவாதி. பொது பலசேனாவை தடைசெய்வதற்கும், ஞானசார தேரரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கும் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்று பட்டு கோஷமெழுப்ப முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் குறி;ப்பிட்டார்.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதே பொது பலசேனாவின் நீண்ட கால ஒரு இலக்கு. நான் சவூதியில் இருந்தபோது அங்கு வாழும் நூற்றுக்கணக்கான பேர் ஒன்று பட்டு இந்த பொது பலசேனாவை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தி கேட்டனர் என்றும் எந்தளவுக்கு மிகவும் கேவலமாக இறங்கி முஸ்லிம்களையும் அவர்களது வர்த்தகத்தையும் அழிக்க முடியுமோ அந்தளவுக்கு இனவெறியர்கள் கீழிறங்கியிருப்பதை என்னால் அங்கு உணர முடிந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இயல்பு வாழ்க்கையினை மீள கொண்டு வருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அரச உயர் தரப்பினர்pடம் வலியுறுத்தியுள்ளேன். இற்றைவரையான முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சம்பவங்களும் அனைத்தும் பொலிஸார் பார்த்தக் கொண்டிருக்கும்போதே இடம்பெற்றுள்ளது. எனினும் இவர்களில் ஒருவரேனும் இதுவரை கைதுசெய்யப்படாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது.
ஜூன் 15ஆம் திகதி பொதுபல சேனா அமைப்பு நிகழ்த்திய உரைகளின் பிரதிபலனாகவே இனவாதம் தூண்டப்பட்டு மிலேச்சத்தனமான தாக்குதல் தொடரப்பட்டடுள்ளது. என்றும் அமைச்சர் குறி;ப்பிட்டார்.
வன்முறைச் சம்பவங்ளை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது இடம்பெற்ற வரும் இன மத மோதல்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் இந்த மோதல்கள் பரவுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறையாக பேருவளை, அலுத்கம சம்பவங்களை குறிப்பிட முடியும் எனவும், இந்த வன்முறைகள் ஏனைய இடங்களில் பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சர்வதே மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் டேவிட் கிரிப்த்ஸ்தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையி;ல் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய அதேவேளை, முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புத் தரப்பினர் தங்களது கடமைகளை உரிய விதத்தில் செய்திருந்தால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்தப்பட்டால் வன்முறைகள் வெடிக்கும் என முஸ்லிம் தரப்பினர் அரசாங்கத்திற்கு எச்சரித்த போதிலும் அதனை கருத்திற் கொள்ளாது பொதுபல சேனா இயக்கத்திற்கு அனுமதி வழங்கியமையே இந்த வன்முறைகளுக்கான பிரதான ஏதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக சிறுபான்மை மதச் சமூகங்கள் மீது பெரும்பான்மை கடும்போக்குவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் சமீபத்திய வன்முறைகள் எமக்கு கவலையளிக்கிறது’ ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டும் செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளது. தென்னிலங்கையில் அளுத்கமவிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும், கடந்த 15 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைசம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு, இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் சமீபத்திய வன்முறைகள் தமக்கு கவலையளிக்கிறது என தெரிவித்திருக்கிறது. இனவாத வன்முறை, வெறுப்பைத் தூண்டும் செயல்களால் இலங்கையின் ஸ்திரத்தன்மையை பேணமுடியாது. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யவே இலங்கை அரசைக் கோருகிறோம்.
வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென முஸ்லிம் நாடுகள் கோரிக்கை
நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பிற்கான பொதுச் செயலாளர் அமீன் மதானி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இலங்கையின் தென் பகுதியில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் நீண்ட காலமாக ஏனைய இன சமூகங்ளுடன் சுமூகமாக வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மைய வன்முறைகள் இன சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மையை வலுப்பெறச் செய்யும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் வன்முறைகள் ஏற்படுவதனை தடுக்க சகல வழிகளிலும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் இலங்கை அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக தென்னிலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது
முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும், மேற்படித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய தரப்பினர் மீது நடவடிக்க வேண்டுமெனவும், அங்குள்ள மக்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கனவு பலித்து விட்டது!
நாட்டில் மூன்று தசாப்தகாலமாக நீடித்திருந்த கொடூர யுத்தம் ஜனாதிபதியின் தலைமையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட் நிலையில், அதனை சகிக்க முடியாத பொதுபலசேனா அமைப்பு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படுகின்றது.
ஏற்கனவே இவர்களின் செயற்பாடுகள் முழு முஸ்லிம் சமூகத்தையே நாட்டையும் பாரதூரமாக பாதிக்கும் எனவும் இவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் படியும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அமைச்சர் ரிஷாட் அரச தரப்பினருக்கு பல தடவைகள் கூறிவந்தமை குறிப்பிடதக்கது.