வில்பத்து தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பிரதேசத்தினுள் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வீடுகள் எதனையும் நிர்மாணி க்கவில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சட்டபூர்வமான காணியில் முசலி, மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 300 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் முசலி பிரதேச செயலாளர் எஸ்.கே.கேதீஸ்வரன், வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சமரக்கோன் ஆகியோர் தெரிவித்தனர்.
வில்பத்து தேசிய பூங்கா எல்லைக்கு வெளியில் சரணாலயப் பிரதேசத்தில் 73 குடும்பங்கள் சட்டவிரோதமாக குடிசைகள் அமைத்து குடியிருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றி மாற்றிடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப் பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வில்பத்து தேசிய பூங்கா பிரதேசத்தினுள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சில் நடைபெற்றது.
இங்கு விளக்கமளித்த அமைச்சர் ரிசாட் பதியுதீன், வில்பத்து சரணாலய பிரதேசத்திலுள்ள 22,000 ஹெக்டெயர் காணி சுத்திகரிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக சில தரப்பினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது. சரணாலயத்தின் ஒரு அங்குல காணி கூட முஸ்லிம்களால் பெறப்படவில்லை.
மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 22 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்களே அங்கு மீளக்குடியமர வந்துள்ளனர்.
இவர்களின் காணிகள் கடற்படை முகாம் அமைப்பதற்கு பெறப்பட்டுள்ளதால் 73 குடும்பங்கள் வில்பத்து தேசிய பூங்கா எல்லைக்கு வெளியே குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். இது சட்டவிரோதமான நடவடிக்கை என்பதால் இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளோம். இந்த மக்களுக்கு இரு வாரங்களில் மாற்றுக் காணிகள் வழங்க பிரதேச செயலாளர் உறுதியளித்துள்ளார்.
மறிச்சிக்கட்டி பிரதேச செயலக பிரிவில் மூன்று பள்ளிவாசல்கள் காணப்பட்டன. அவை புலிகளால் உடைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு பள்ளிவாசல் மாத்திரமே அங்கு கட்டப்பட்டுள்ளது. மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி வீடமைப்புத் திட்டம் இடம்பெயர்ந்த மக்களுக்காக சட்டபூர்வமாக நிர்மாணிக்கப்பட்டது என்றார்.
வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சமரக்கோன் தெரிவித்ததாவது, வில்பத்து தேசிய பூங்கா எல்லையினுள் சட்டவிரோதமாக வீடுகள் எதுவும் கட்டப்படாத போதும் அதன் எல்லையிலுள்ள சரணாலய பிரதேசத்தில் சில தற்காலிக குடிசைகள் கட்டப் பட்டுள்ளன.
இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி வீடமைப்புத் திட்டம் சரணாலய பிரதேசத்துக்கு வெளியிலே உள்ளது என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த முசலி பிரதேச செயலாளர் எஸ்.கே.கேதீஸ்வரன் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக இருந்த மறிச்சிக்கட்டியிலுள்ள 1020 ஏக்கர் காணி, விடுவிக்கப்பட்டு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டது. அந்தக் காணியிலேயே 300 வீடுகள் கட்டப்பட்டு ள்ளன. அதற்கான காணி உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முசலி பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் ஹ¥னைஸ் பாரூக் எம்.பி, முசலி பிரதேசசபைத் தலைவர், உபதலைவர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.