நாடு முழுவதிலும் 180 தையல் பயிற்சி நிலையங்களை உருவாக்கி கூட்டுறவின் அடிப்படையில் 6மாதங்களின் பின்னர் அவற்றை தொழில் நிறுவனங்களாக மாற்றும் திட்டமொன்றை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு முன்னெடுத்து வருவதாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கற்பிட்டியில் அல் – அக்ஸா தையல் தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,  தனது அமைச்சின் கீழான இலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகளுக்கான  நிறுவனம் (சிலிட்டா) கடந்த காலங்களில் இவ்வாறான நிலையங்களை உருவாக்கிய போதும் பயனாளிகளுக்கும் நிறுவனத்திற்குமிடையிலான தொடர்புகள் இல்லாமல் போனதனால் உரிய பயனை ஈட்டமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே தான் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இனமத பேதமின்றி நாடாளாவிய ரீதியில் இந்த பயிற்சி நிலையங்களை உருவாக்கி வருகின்றோம். ஆரம்பத்தில் 3000பேருக்கு பயிற்சி வழங்குவோம். ஒவ்வொரு நிலையத்திற்கும் பெறுமதியான ஜூக்கி மெஷின்கள் வழங்கப்படுகின்றன. ஒரு நிலையத்தில் 20யுவதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இவர்களை பயிற்றுவிக்க போதனாசிரியர் ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டு வார நாட்களில் அமைச்சினால் சம்பளத்துடன் கூடிய மேலதிக பயிற்சி வகுப்புகளும் அவருக்கு வழங்கப்படுகின்றது.

இந்த ஆறு மாத தையல் பயிற்சி நெறியில் பங்கேற்கும் யுவதிகளுக்கு 80சதவீதம் வரவு இருக்க வேண்டும். அப்போதுதான் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி நிலயங்களுக்கு வழங்கப்படும் தையல் இயந்திரங்கள் குறித்த நிலையத்தில் பயிற்சியை முடித்தவர்களுக்கு உரிமையாக்கப்படுவதுடன், இவர்கள் நிரந்தரமாக கூட்டுறவு அடிப்படையில் தமது தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள அமைச்சினால் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புத்தள மாவட்டத்தில் 10தையல் பயிற்சி நிலையங்களை உருவாக்கவுள்ளோம். இதன் மூலம் வருமானம் குறைந்த பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் புத்தள மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் நவவி, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அலிசப்ரி, யஹ்யா,முஸம்மில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *