முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள கயவர்கள் காட்டிக்கொடுத்து, மக்களின் உண்மையான போராட்டத்தை மலினப்படுத்துவதற்கு துணை போகின்றார்கள் என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னர் மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (01) மாலை சந்தித்த பின்னர் அமைச்சர் அங்கு உரையாற்றினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

வன்னி மக்களின் பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுத்த  உங்களை இறைவனின் உதவியால் ஒரு போதும் கைவிடமாட்டேன். பதவி, பட்டம், சொகுசு எல்லாமே உங்களுக்குப் பிறகுதான். இந்தப் போராட்டத்தில் நானும்  ஒரு பங்காளியே.

முசலிப் பிரதேச மக்களுக்கு கடந்த காலத்தில் நடந்த  அநியாயங்களுக்காக  நான் குரல் கொடுத்து, துணிந்து போராடியதனாலேயே பேரினவாதிகள்  என்னை ஓர் இனவாதியாக சிங்கள மக்கள் மத்தியிலே சித்தரித்துக் காட்டினர்.

இனவாத நச்சு ஊடகங்களும் இனவாத சூழலியலாளர்களும் என்னை தாறுமாறாக விமர்சித்தனர், விமர்சித்தும் வருகின்றனர்.  நமது சமூகத்தில் உள்ள நயவஞ்சகக் கூட்டம் ஒன்று, நான் அரசியலுக்காக, இருப்புக்காக, வில்பத்து விவகாரத்தை நானே பூதாகரப்படுத்துவதாகத் தெரிவித்து அவமானப்படுத்தினர். பெளத்த இனவாதிகளிடம் தவறான தகவல்களை வழங்கி அவமானப்படுத்தினர்.

2012ம் ஆண்டு இந்த பிரதேச மக்களின் எண்ணங்களோ, விருப்பங்களோ பெறாமல் உங்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன. அதனை விடுவிப்பதற்காக நான் இற்றைவரைப் போராடிக் கொண்டு இருக்கிறேன். அதற்கிடையில் ரஷ்யாவில் இருந்து கையெழுத்து இடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலால் இந்த பிரதேசத்துக்கு இன்னுமொரு பேரிடி விழுந்துள்ளது.

இந்த போராட்டம் மக்கள் போராட்டம். தலைவர்கள் வழி நடத்தி நீங்கள் வீதிக்கு வரவில்லை. உங்கள் பிரதிநிதியான நானும் உங்களை விட்டு ஓட மாட்டேன். இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்வதற்கு எனது அதி உச்ச அதிகாரத்தை பயன்படுத்துவேன். இறைவனும் இதற்கு துணை புரிவான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மிகவும் காட்டமான தொனியில் நமக்கு நடந்த அநியாயங்களை எடுத்துரைத்து வர்த்தமானியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன்.

அரசியல் தலைமைகள் மைத்திரியை ஆதரிக்க முன்னர் முஸ்லிம் மக்கள் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தார்கள் என்ற உண்மையை நாட்டு தலைமைகளிடம் மீண்டும் உணர்த்தியுள்ளோம்.

நமது போராட்டத்துக்கு ஆதரவு  தெரிவித்து இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டும் என்ற எமது நியாமான கோரிக்கைக்கு ஜம் இய்யத்துல் உலமா, முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், அரசியல் தலைவர்களான அமைச்சர் பெளசி,  முஜிபுர் ரஹ்மான் எம்.பி, சகோதரர் அசாத் சாலி போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர். எனினும் எமது சமூகத்தின் நயவஞ்சக அரசியல் வாதிகள் இன்னும் என்னைத்தான் தூற்றுவதிலேயே காலம் கடத்துகின்றனர். கூட்டங்கள் போட்டு என்னை திட்டுவதிலேயே இவர்கள் திருப்தி காண்பது ஏனோ எனக்குப் புரியவில்லை.

முசலி பிரதேசத்தில் வன இலாக்காவுக்கு  தற்போது சொந்தமாக்கப்பட்டுள்ள  நமது மக்களின் பூர்வீக காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கையளிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த தீர்மானத்தை பிரதமரின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதே போன்று தற்போது நடந்துள்ள இந்த பாதகமான விடயத்திலும் எந்த விட்டுகொடுப்பும் எம்மிடம் இல்லை. சிங்கள அரசியல் வாதிகள் சிலர் யதார்த்தம் புரியாமல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க கூடாது.

ஜனாதிபதி மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உயிரையும் துச்சமென மதித்து கடந்த அரசில் இருந்து வெளியேறி, தேர்தலில் வெல்லுவோமா அல்லது தோற்று விடுவோமா என்று நிலை குலைந்திருந்த ஜனாதிபதிக்கு உரமூட்டியவர்கள் நாங்களே.

 வெறுமனே ஒப்பந்தங்கள் இல்லாமல் நாங்கள் இணையவில்லை. உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பின்னரே நாங்கள் ஆதரித்தோம், அவர்களதுவெற்றிக்கு உழைத்தோம். எனவே முஸ்லிம் மக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்த இடமளிக்க மாட்டோம்.

எமது சமூகம் போராட்டத்துக்கு பழக்கப்பட்டது  அல்ல. நாட்டை துண்டாடுவதற்கோ பயங்கரவாத்திற்கு துணை போவதற்கோ நாங்கள் எந்த காலத்திலும் ஈடுபாடு காட்டியவர்கள் அல்லர். எனினும் எங்களை வீதிக்கு இறங்கி போராடுமளவுக்கு இந்த நல்லாட்சி கொண்டு வந்திருப்பதுதான் வேதனையானது என்று  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *