கிண்ணியா பிரதேசத்தை டெங்கு பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அங்கு பரவி வரும் டெங்குக் காய்ச்சலினால் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களை நீக்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலண்டனுக்கு சென்றுள்ள அமைச்சர் ரிஷாட் கிண்ணியா நிலவரங்கள் குறித்து அமைச்சர் ராஜிதவிடம் விளக்கினார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிண்ணியா நகரசபை முன்னாள் தலைவர் டாக்டர் ஹில்மி ஆகியோர் அமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டுவந்ததை அடுத்தே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த துரித நடவடிக்கையை எடுத்தார்.
கிண்ணியாப் பிரதேசத்திற்கு கொழும்பிலிருந்து பிரத்தியேக மருத்துவ குழுவொன்றையும், தொழிநுட்பவியலாளர் குழுவொன்றையும் அனுப்பி தீவிரமடைந்து வரும் டெங்கு பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு ஆவன நடவடிக்கையை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.