கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் மூதூரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (12.02.2016) திறந்து வைக்கப்பட்ட 325 வது லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அதே தினம் ரூபாய் ஆறு இலட்சத்து பதினோராயிரம் விற்பனைப் புரள்வு, ஏறத்தாழ 10 மணித்தியாலங்களில் இடம்பெற்றுள்ளது. சுமார் 1000 நுகர்வோர்கள் இந்த நிலையத்தில் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இது வரை காலமும் சதொச நிறுவனமொன்றில் இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு தொகையான விற்பனை இடம்பெறவில்லையென சதொச கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஏ. எம் அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மூதூரில் அமைக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட இந்தக் கிளையில் நவீனரக கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் பொஸ் ( Pழள) முறையிலான விற்பனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த நிகழ்வைத் திறந்நுவைத்து உரையாற்றிய அமைச்சர் றிஷாட் பதியுதீன், மூதூரின் வரலாற்றில் இவ்வாறான சதொச நிறுவனம் ஒன்று அமைக்கப்படுவது வரலாற்று முக்கியமானதென்றும் கூறினார். “ எனது அமைச்சின் கீழான லங்கா சதொசவில் 3500க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த அரசில் நட்டத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனத்தை ஊழியர்களின் ஒத்துழைப்புடனும், அதிகாரிகளின் முயற்சியுடனும் வெற்றிகரமான முறையில் இலாபத்தை ஈட்டும் நிறுவனமாக மாற்றி வருகின்றோம். லங்கா சதொசவின் வருடாந்த விற்பனைப் புரள்வு 30 பில்லியனாக இருக்கின்றது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“லங்கா சதொசவின் புதிய முகாமைத்துவம் பல்வேறு அபிவிருத்தி மூலோபாயங்களை பயன்படுத்தி இந்த நிறுவனத்தை விரிவுபடுத்தி வருகின்றது. இந்த வகையில் 125 கண்காணிப்பு கமராக்கள் திட்டம், 195 ஈ.ஆர்.பி திட்டங்கள், ஐந்து ஆய்வு கூடங்களை அமைத்தல், மனிதவள தகவல் முறையை உட்புகுத்தல் ஆகியவற்றை முன்னெடுக்கும் வகையிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.