ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தனியார் ஊடகங்கள் சில செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

பாடசாலை அதிபர் கே.எம்.எம. நாளிர் – தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் முஜிபுர் ரகுமான் எம். பி, மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ், முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளரும், பாடசாலை பழைய மாணவர் சங்கச் செயலாளருமான ஷாதிக் சிஹான், தொழிலதிபர் சப்ரி, பாடசாலை அபிவிருத்திக் குழச் செயலாளர் என். எஸ். எம். சப்ரிக் உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

அமைச்சர் உரையாற்றியபோது கூறியதாவது,

ஊடகங்கள் தமது பார்வையை முஸ்லிம் சமூகத்தின் மீது அதிகம் செலுத்துவருகின்றன. மேலைத்தேய சக்திகள் முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்கில் திட்டமிட்டு தமது செயற்பாடுகளை காலகாலமாக முன்னெடுத்து வருவது கடந்தகால கசப்பான விடயங்கள். பண பலத்தையும், ஊடக பலத்தையும் பயன்படுத்தி இஸ்லாத்தை அழிக்க வேண்டுமென்று மேலைத்தேயத்தின் சில பலம் பொருந்திய நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

அண்மைக் காலமாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மீது  அவர்கள் தமது எச்சசொச்சத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பின்னணியிலே இலங்கையிலுள்ள சில தனியார் ஊடகங்களும், முகநூல்களும் முஸ்லிம்களை மலினப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் தமது முழு நேரத் தொழிலாக கொண்டுள்ளன. இந்த நிலை ஆபத்தானது. முஸ்லிம் சமூகத்திலும் திறமையான, ஆற்றலுள்ள ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்ற போதும் சுதந்திரமாகவோ, உண்மையாகவோ தமது சமூகத்தைப் பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியாது திண்டாடுகின்றனர்.

ஊடக நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்குக்கட்டுப்பட்டு இவர்கள் எழுதாவிட்டால் பல்வேறு பிரச்சினைகளை அனுபவிக்க வேண்டிய அபாயமும் அவர்களுக்கு இருக்கின்றது. கைகட்டி வாய்பொத்தியே அவர்கள் தமது ஊடகத் தொழிலை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஊடக மாபியாக்களின் ஆபத்திலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் நமது சமூகத்தை  காப்பாற்ற வேண்டுமென்றால் கல்வித் துறையிலும், ஊடகத் துறையிலும் நாம் உயர் நிலை அடைய வேண்டும் இதுதான் யதார்த்தம்.

தங்களிடம் இருக்கின்ற ஊடக உரிமையையும், ஊடக வளத்தையும் பயன்படுத்தி எம்மை அழி;க்கும் இந்த நாசகார செயற்பாடுகளுக்கு நாம் இடமளிக்கக்கூடாது. நாட்டின் ஒற்றுமைக்காகவும, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் தங்களை அர்ப்பணித்து பல்வேறு தியாகங்களைப்புரிந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது இனவாத சக்திகள் இவ்வாறு நடப்பது வேதனையானது.; இதில் நிறையவே மறைகரங்கள் தொழிற்படுவது வெட்ட வெளிச்சமான உண்மை. நாம் செய்த தியாகங்களை கணக்கிலெடுக்காது எம்மை கறிவேப்பிலைகளாக பயன்படுத்திவிட்டு இப்போது நன்றி மறந்தவர்களாக சில ஊடகங்களும், அரசியல் சக்திகளும் தொழிற்பட்டு வருகின்றன.

இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ்கின்ற சமூகங்களுக்கிடையே பிளவுகளை உருவாக்கி சிங்கள – முஸ்லிம் மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர்காயமுடியுமென அங்கலாய்த்துவரும் சக்திகளுக்கு இனவாத ஊடகங்களும் அவ்வூடகங்களின் பிரதானிகளும் தீனி போடுகின்றனர். மற்றுமோர் இரத்த ஆறை இலங்கையில் ஓடச் செய்து முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், வளங்களையும் அழித்தொழிப்பதே  இவர்களின் உள் நோக்கமாக அமைகின்றது.

தலைநகர் கொழும்பு எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் கேந்திரமான இடமாகும். அனைவரினதும் பார்வையும் இங்குதான் இருக்கின்றது. கொழும்பிலே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். வெளிநாடுகளிலிருந்தும் அரபு நாடுகளிலிருந்தும் வருகின்ற இராஜ தந்திரிகளும், கல்விமான்களும், நிபுணர்களும் கொழும்பிலே  முஸ்லிம்கள் சந்தோசமாக வாழ்க்கை நடாத்துவதாகவே கருதுகின்றனர். தலைநிமிர்ந்து நிற்கும் அழகான பள்ளிவாசல்களும், கம்பீரமாக காட்சிதரும் பாடசாலைகளையும், மத்ரஸாக்களையும் அவர்கள் காணுகின்ற போதும், அங்கே செல்கின்ற போதும் இவ்வாறான ஒரு எண்ணம் ஏற்படுவது இயல்பே. ஆனால் உண்மை நிலை மாற்றமானது. கொழும்புவாழ் முஸ்லிம்களின் கல்வித்தரம் மிகவும் பின்னடைந்திருக்கின்றது என்பது பரம இரகசியமே. வெளியிலுள்ளவர்களுக்கு கொழும்பு முஸ்லிம்கள் கல்வியிலே உயர்ந்து நிற்ககின்றார்கார்கள் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித்தரம் மற்றும் பெறுபேறுகளுடனன் ஒப்பிடும் போது கொழும்பு மாணவர்கள் கல்வியிலே பாரிய வீழ்ச்சி நிலையில் இருக்கின்றனர். நாங்கள் மேற் கொண்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் கொழும்பு மக்களின் கல்வித்தரம் பின்னடைவு கண்டுள்ளதை உணர்கின்றோம். பகீரதப் பிரயத்தனப்பட்டு இவர்களின் கல்வியை உயர்த்த வேண்டிய தேவை நமக்கு இருக்கின்றது. இது தொடர்பில் பேதங்களை மறந்து சமூகத்தலைமைகள் ஒன்றுபட்டு ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து கொழும்பு முஸ்லிம்களின் கல்வி உட்பட ஏனைய பிரதேச மக்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தித் தருமாறு கோரிக்கை விடுப்போம். இது தொடர்பில் ஒரு முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

கொழும்பிலே முஸ்லிம் பெண்கள் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான காணியொன்றை நாங்கள் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதே போன்று கொலன்னாவ, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்வித் தேவைகளைக் கருத்திற் கொண்டு அங்கும் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான காணியொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம். இந்தப் பிரதேசத்தில் பாடசாலை ஒன்று அமைந்தால் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க முடியும். அத்துடன் பாடசாலைக்கே செல்லாமல் வீட்டிலே காலத்தைக் கழிக்கும் மாணவர்களின் கல்விக்கு உயிரூட்ட முடியுமெனவும் நாம் நம்புகின்றோம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *