உலகின் முன்னணி உணவு நிகழ்வான ‘வளைக்குடா உணவு கண்காட்சி’ (Gulfood) கடந்த வாரம் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இலங்கையின் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு துறையினர் இந்த மாபெரும் ‘வளைக்குடா உணவு கண்காட்சி’யில் கலந்துக்கொண்டு தமது வெற்றி இலக்கினை ஈட்டியுள்ளனர்.
பெப்ரவரி 23-27 வரை நடைபெற்ற மிகப்பெரிய இந்த காட்சியில் உணவு 152 நாடுகளில் இருந்து 77 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 4500 அரங்குகளுடன் இங்கு உலக அளவில் உணவுத்துறையில் அனைத்துவிதமான உணவுப்பொருள்கள் மற்றும் குடிபானங்கள் காட்சிப்படுத்தபட்டிருந்தன.
2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி தொடரில் இலங்கை உணவு மற்றும் பானங்கள் துறையினர் தொடர்ந்து ஏழாவது முறையாக பங்குபற்றியுள்ளனர். இந்த வளைகுடா சந்தையினூடாக இலங்கையின் உணவு மற்றும் பானங்களை ஊக்குவிக்கவிக்கும் உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகின்றேன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.
இக்கண்காட்சி நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துக்கொண்டு இலங்கையின் காட்சியாளர்கள் சந்தித்து அவர்களின் திறமைகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு காட்சியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில் தெரிவித்ததாவது:வளைகுடா உணவு கண்காட்சி சந்தையானது உலகளாவிய முன்னணி உணவுதொழில் நிகழ்வு ஆகும். இதில் உணவு பொருட்கள் உற்பத்தி , சேவைகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் சிறந்த முன்னணி நிறுவனங்கள் நேருக்கு நேரான வர்த்தகம் சம்பந்தமான விசாரணைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளினை நடத்தும்.
இலங்கை உட்பட ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, டென்மார்க், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், அயர்லாந்து, கொரியா, லெபனான் என 25 நாடுகளில் இருந்து உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட வலுவான பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இக்கண்காட்சியில் கலந்துக்கொண்டனர். மேற்படி இக்குழுவினர் நிர்வாகிக்கும் மலிபன், சிலோன் பிஸ்கட், அக்பர் பிரதர்ஸ், மபொரக் தேயிலை , HVA உணவுகள், வீச்சி பெருந்தோட்டம், பிஃனால், சிலோன் டீ மார்கட்டிங், சிலோன் குளிர்பான கடைகள், சிலோன் பிரேஷ் டீ , டீ BPL டீஸ் மற்றும் அடம் எக்ஸ்போ போன்ற நிறுவனங்கள் குறிப்பாக தமது பொருட்களினை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மத்திய கிழக்கு பார்வையாளர்கள் மத்தியில் சிலோன் டீ , தேங்காய் தண்ணீர் , மசாலா , தேங்காய் சார்ந்த பொருட்கள், பிஸ்கட் மிட்டாய் உருப்படிகள், இஞ்சி பீர் ,கசப்பான எலுமிச்சை குடிபானம் உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அத்துடன் இந்தியா , துருக்கிய , அல்பேனிய அமெரிக்கா , எகிப்து, ஜோர்டான், குவைத் போன்ற நாடுகளில் இருந்து எமது பொருட்களுக்கு 1.32 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஸ்பாட் ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் புதிய தொழிலதிபர்களை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட பயிற்சி அளித்து ஏராளமான ஏற்றுமதியாளர்களை உருவாக்கி வருகிறது. இந்த கண்காட்சி மூலம் உணவு மற்றும் வேளாண்பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய வாய்ப்பாக அமையும் என்றார்.
உலகச் சந்தையில் கிடைக்கும் பலன்கள் உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு விருந்தோம்பல் வணிகங்களுக்குப் பரவலாகக் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்துடனும் இக்கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதனூடாக புதிய சந்தைகள் வளர்வதுடன், தேவைகளும் அதிகரிக்கும் நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மென்மேலும் தொடரும் என வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
.