இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அச்சுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தகாலத்தில் மீனவத்தொழில் செய்ய முடியாது அவதியுற்ற மீனவர்கள், இன்னும் கஷ்டங்களையே சந்தித்து வருவதாகவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

 

மன்னார், பள்ளிமுனை புனித லூசியாஸ் மகா வித்தியாலயத்தில் 29/09/2016 அன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அதிபர் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுகந்தி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்,

 

மன்னார் நகரத்திலே பள்ளிமுனை கிராமம் பெரிய கிராமமாகும். இங்குள்ளோரில் அநேகர் மீனவர்களாக இருந்த போதும், அவர்களின் பிள்ளைகள் பல்வேறு துறைகளிலும், இந்த மாவட்டத்திலே தமது திறமைகளை வெளிக்காட்டியவர்கள். குறிப்பாக, விளையாட்டுத் துறையில் இந்தக் கிராமமக்கள் ஆற்றல் படைத்தவர்கள். அதனால்தான் தேசிய ரீதியில் அவர்களால் சாதனை படைக்க முடிகின்றது.

 

மன்னார் மாவட்டம் இலங்கைக்கு உள்ளே இன்னுமொரு தீவாக அமையப் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் வாழும் மக்கள் தமக்குக் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி, தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்கின்றனர்.

 

மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. ஏழைக் குடும்பங்களினதும், கூலித் தொழில் செய்வோரினதும் பிள்ளைகள் இன்று படித்து, உயர் அந்தஸ்திலான தொழில் பெற்று, பல்வேறு துறைகளிலும், தலைவர்களாக விளங்குவதை நாம் காண்கின்றோம்.

 

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு கதை உண்டு. சமுதாய அந்தஸ்து உள்ளவர்களிடம் கேட்டுப் பார்த்தால், அவர்கள் தமது கடந்த காலக் கதையை, தாம் பட்ட கஷ்டங்களை கூறுவர்.

 

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாந்தைப் பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர். அங்கேயே கல்வி கற்று பின்னர் சட்டத்தரணியாகி, இப்போது மாகாணசபை அமைச்சராக மக்கள் பணி புரிகின்றார். தாராபுரத்தில் பிறந்த நான், அகதி முகாமில் பல துன்பங்களை அனுபவித்து, உயர்கல்வி கற்பதில் பல்வேறு தடைகளை சந்தித்து, இறைவனின் உதவியால் பல்கலைக்கழகம் சென்று நான் எதிர்பார்த்த அடைவை அடைந்தேன்.

 

அமைச்சர் டெனீஸ்வரனும், நானும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கிடையிலே அரசியல் ரீதியிலான கொள்கை வேறுபாடுகள் இருந்த போதும், நாங்கள் ஒரு விடயத்தில் ஒருமுகப்பட்டுள்ளோம். யுத்தத்தால் சீரழிந்துபோன மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், இந்த மாவட்டத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும், நாம் இணைந்து பணியாற்றுகின்றோம். எத்தகைய விமர்சனங்கள் ஏற்பட்ட போதும், மக்கள் பணியிலிருந்து எங்களை தடுக்க முடியாது என்பதை நான் ஆணித்தரமாக கூற விளைகின்றேன்.

 

எனவே, மாணவர்களாகிய நீங்கள் எந்தக் காரணங்களுக்காகவும் கல்வியைக் கைவிடக் கூடாது. சிறந்த அதிபர்களையும், பண்புள்ள ஆசிரியர்களையும் கொண்ட இந்தப் பாடசாலையில் தொடர்ந்து கற்று,   உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களை நீங்கள் நிறைவேற்றி சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக உருவாக வேண்டும்.

 

பள்ளிமுனை கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லாத குறையை போக்குவதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிருவாகத்தின் கீழான மைதானத்தை கடந்த அரசில் நாங்கள் அபிவிருத்தி செய்த போதும், ஆட்சி மாற்றத்தின் விளைவுகளால் அந்த முன்னெடுப்பில் ஒரு தற்காலிக தேக்கம் ஏற்பட்டது. இந்தக் கிராம பெற்றோர்கள், நலன் விரும்பிகளுக்கும், விளையாட்டு அமைச்சருக்குமிடையே நான் கொழும்பில் சந்திப்பொன்றை ஏற்படுத்திக் கொடுத்திருந்தேன்.

 

நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் பேச்சு நடத்தி இதற்கு உரிய தீர்வை தருவதாக அமைச்சர் வாக்களித்துள்ளார்.

 

இந்தப் பாடசாலையில் கட்டிடத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், அடுத்த வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், சில நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன் என அமைச்சர் கூறினார்.

 

 

14441130_1429948820354642_2376063836426180826_n

 

14502981_1429948890354635_8257389181597145799_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *