வெல்லம்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றில், வெளிநாடுகளிலிருந்து பாரிய பெரல்களில் கொண்டுவரப்பட்டு, இங்கு பிரசித்திபெற்ற முக கிரீம் நிறுவனங்களின் பெயர்களைக்கொண்ட சிறு பெட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்த 45000 கிரீம் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இந்த நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்தார்.
ஒவ்வொரு பெட்டிகளிலும் தலா 350ரூபா விலை பொறிக்கப்பட்டிருந்ததெனவும் தெரிவித்த அவர் இந்த நிறுவனம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட விதிகளின் கீழ சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட குறித்த நிறுவனத்துக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் சட்ட விரோதமான வர்த்தகர்கள், அரிசி மோசடி, காலாவதியான பொருட்களை விற்பனை செய்துவரும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.