கொழும்பு,  வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொ சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவரே வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள்  அழிப்பதாக தினமும் மோசமான பிரசாரங்களைச் செய்து, ஊருக்கு ஊர் பாதை யாத்திரை மேற்கொண்டுவருவது மிகவும் கேவலமானது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் இன்று (04) தெரிவித்தார்.

 பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

ஏப்ரல் சீசன் வந்துவிட்டால், சில பெரும்பான்மை இன வியாபாரிகள் தமது விற்பனையை அதிகரிப்பதற்காக குறிப்பிட்ட இந்த மதகுருவுக்கு இலஞ்சம் வழங்கி  அவரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடக பெருமளவு பணத்தை செலவளித்து இவ்வாறான இனவாத பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவேதான் இந்த மதகுரு இந்த வேலைத்திட்டத்தை சில ஊடகங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தெருத்தெருவாக இவ்வாறான மோசமான குற்றச்சாட்டுக்களை என் மீதும், முஸ்லிம்கள் மீதும் சுமத்தி வருகின்றார்.

மற்றுமொரு இனக்கலவரத்தையும், சமூகங்களுக்கிடையிலான மோதல்களையும் உருவாக்குவதற்கான சதியாகவும், திட்டமாகவுமே அவரின் செயற்பாடு இருக்கின்றது. இந்த மதகுருவானவர் இந்த பொய்யான வில்பத்து பிரச்சாரத்திற்கு அப்பாவி இளைஞர்களையும், பல்கலைக்கழக இளைஞர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சுமார் 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். இவரை மதகுரு என்றே கூறமுடியாதுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் மதகுரு தொடர்பில்  பொலிஸ் மா அதிபர் இவரது அநியாயத்தை பார்த்துக்கொண்டிருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவளத்திணைக்கள அதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

வடக்கிலே முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் அங்குள்ள 28 விகாரைகளில் உள்ள பெளத்த பீடாதிபதிகளோ, பெளத்த மதகுருமார்களோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.  இந்து, கத்தோலிக்க மதகுருமாரும் எதிர்ப்பு வெளியிடவில்லை. அது மாத்திரமின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம்கள் குடியேறுவதை எதிர்க்கவில்லை.  ஆனால் இந்த மதகுரு மாத்திரமே தொடர்ந்தும் அட்டகாசமான இந்த செயற்பாடுட்டில்  ஈடுபடுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் இந்த சபையில் வில்பத்து தொடர்பில்  மிகவும் ஆழமான உண்மையான கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் சரியானது. 

முசலி பிரதேசத்தில் விலத்திக்குளம் என்ற ஒரு பகுதியை மாத்திரம் மையமாக வைத்து கண்க்காய்வுத்திணைக்களம் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது ஒரு துவேசமான, தன்னிச்சையான அறிக்கை என்பதே எமது கருத்தாகும். 

650 ஏக்கர் காணிகளை மாத்திரம் சம்மந்தப்படுத்தி தயாரிக்கப்பட்ட  இந்த அறிக்கையில், அந்த பிரதேசம் தொடர்பான 20 சதவீதமான ஆவணங்களை மாத்திரமே பரிசீலித்து, களத்தில் எந்தவிதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் வனவள அதிகாரிகளினதோ வனவள அமைச்சரினதோ எந்த விதமான கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளாமல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் . வனவளத்திணைக்களம் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் மைத்திரிபால ஸ்ரீசேனாவும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சிக்கு நாங்களும் பாரிய பங்களிப்பை செய்தவர்கள். 

ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அண்மைய நாட்களில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் மேற்கொண்டுவடும் அசுர, தீவிர நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. போதை வியாபாரிகளும், போதைவஸ்து பாவிப்பவர்களும் தற்போது மிகவும் அச்சமான நிலையில் இருக்கின்றனர். போதைவஸ்துடன் தொடர்புடையவருக்கு அதி உச்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பில் அரசியல் வாதிகளிடம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்ற போதும் என்னைப்பொறுத்த வரையில் இதனை ஆதரிக்கின்றேன்.

இந்த போதைவஸ்து வழிகேட்டில் எவர் சம்பந்தப்பட்டிருப்பினும் அவர்கள் அரசியல் வாதியாகவோ வியாபாரிகளாகவோ இருந்தாலும் கூட  அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். ஜனாதிபதியின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்குவோம். என்று தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *