விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று மாலை (26. 01. 2017) திறந்து வைத்த நிகழ்வில் இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். சார்ள்ஸ் நிர்மலநாதன் எம் பி, அரசாங்க அதிபர், கிராமிய அபிவிருத்தி வங்கித் தலைவர் உட்பட அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் இகலந்துகொண்டனர்

விவசாயிகளின் வாழக்;கையிலே வசந்தத்தை ஏற்படுத்தி அவர்களை வளமுள்ளவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் மாற்றுவதற்காகவே இவ்வாறான ஒரு வேலைத் திட்டத்தை நாம் மன்னாரிலே ஆரம்பித்துள்ளோம். நெல்லுற்பத்தியிலே முன்னணி வகிக்கும் மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் படுகின்ற அவஸ்தைகளையும் கஸ்டங்களையும் கடந்த காலங்களிலே அமைச்சரவைக் கூட்டங்களிலும், பாராளுமன்றத்திலும் நாம் சுட்டிக் காட்டியதன் வெளிப்பாடாகவே எமது நலனில் அக்கறை கொண்டு நிதி அமைச்சர் ரவிகருணாநாயகா அரசாங்க தானியக் களஞ்சியம் ஒன்றை எமக்கு அமைத்துத்தந்துள்ளார்.

மன்னார் மாவட்ட விவசாயிகள் மிகவும் கஸ்டப்பட்டு விவசாயத் தொழிலை மேற்கொண்டு அபரிமிதமான நெல் விளைச்சலை காலகாலமாக பெற்றுக் கொண்டு வருகின்றபோதும், அவர்களின் உழைப்புக்கேற்ற இலாபம் கிடைக்காத நிலைமை கடந்த காலங்களில் இருந்துவந்ததை நாம் அறிவோம். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் உற்பத்தி செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் உரிய விலைக்கு அதனை விற்க முடியாத துர்ப்பாக்கியம் இருந்தது. இதற்குக் காரணம் நெல்லை சேமித்து வைக்கக் கூடிய களஞ்சியம் இல்லாமையே. இன்று அவர்களுக்கு பரிகாரம் கிடைத்துள்ளது.

அனுராதபுர மாவட்டத்திலும், மொனராகல புத்தளவிலும் ஏற்கனவே இரண்டு களஞ்சியசாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மன்னார் மாவட்டத்திலே இவ்வாறான நெல்லை சேமிப்பதற்கான களஞ்சியசாலையொன்று மூன்றாவதாக அமைக்கப்படிருக்கின்றது. வடமாகாணத்திலே முதலாவது களஞ்சியசாலையென்ற பெருமையை மன்னார் மாவட்டம் பெறுகின்றது.

நிதியமைச்சர் ரவிகருணாநாயகா எப்போதுமே மக்களின் நலன்கள் பற்றியே சிந்திப்பவர். அவர் ஒரு திறமையான அமைச்சர். கடந்த வரவு செலவுத்திட்ட பிரேரணையிலே மன்னார் மாட்ட மல்வத்து ஓயா தொடர்பில் அவர் சில முன்மொழிவுகளை பிரேரித்திருந்தார். மல்வத்து ஓயாத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்விலே பாரிய திருப்பமொன்று ஏற்படுமெனவும் அவர்கள் வருடத்திலே காலபோகம், சிறுபோகம் ஆகிய இரண்டு போகங்களிலும் பயிர் செய்து தாமும் பலன் பெறுவதோடு நாட்டின் நெல் உற்பத்தியிலும் தன்னிறைவைப் பெற்றுக் கொள்வார்களென்று நான் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்த வருடமே அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அந்தத்திட்டத்தை ஆரம்பியுங்கள் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அது இன்று செயலுருப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கட்டுக்கரைக் குளத்தை புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம். அத்துடன் மன்னார் நகரத்தை அழகு படுத்தி நவீன நகராக மாற்றித்தருமாறும் இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் முந்நூறு மில்லியனை ஒதுக்கித்தருமாறும் நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் இன்று அதற்கான அனுமதியையும்  வழங்கியுள்ளார். அரசாங்க அதிபரிடம் அதற்கான மதிப்பீட்டை அறிக்கையை வழங்குமாறு அவர் பணித்திருப்பது எமக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. அதற்காக அவருக்கு நான் நன்றி கூறுகின்றேன்.

நல்லாட்சியை உருவாக்குவதிலே வடக்குக் கிழக்கு மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்த பங்களிப்பை நல்கியமை நான் இங்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். நல்லாட்சியை ஏற்படுத்தியதற்கான பலாபலன்களை நமது மக்கள் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை யாழ்ப்பாணத்திலே இன்று காலை வெளிவிவகார அமைச்சின் தூதரக பணியகம் ஒன்றை அமைச்சர் மங்கள சமரவீர திறந்துவைத்தார். இன்று மாலை மன்னாரிலே நெல் களஞ்சியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை இந்த மாவட்டத்திற்கான விளையாட்டு மைதானமொன்று விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையில் நறுவிலிக்குளத்தில் ஆரம்பிக்கப்படுகின்றது. பலகோடி ரூபாய் செலவுகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் இவ்வாறான பணிகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.

மன்னார் மாவட்டத்திலே எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுவரும் அனைவரின் நலன்களுக்காகவும் கடந்த காலங்களிலும் நாம் பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். அதே போன்று எதிர்வரும் காலங்களிலும் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உதவியுடன் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

மன்னார் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள நெற்களஞ்சியசாலை கிராமிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயலாற்றுவதனால் விவசாயிகளுக்கு பாரிய நன்மை கிடைக்கும். இதன் மூலம் வியாபாரிகள் பெற்றுவந்த கொள்ளை இலாபம் முறியடிக்கப்பட்டு விவசாயிகள் அதிக இலாபம் பெறக்கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உப்பு நீரை சுத்திகரித்து தூய நீராக்கும் இயந்திரமொன்றை மன்னார் மாவட்டத்திற்கும் வழங்குவதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

IMG-20170126-WA0038 IMG-20170126-WA0039 IMG-20170126-WA0040 IMG-20170126-WA0041 IMG-20170126-WA0042 IMG-20170126-WA0043 IMG-20170126-WA0044

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *