வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான ஒரு அங்குலமேனும் நாம் சுத்தம் செய்யவுமில்லை, மக்களை மீளக்குடியேற்றவுமில்லை. இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடத்திற்கு திரும்பிவந்து மீளக்குடியேறியிருக்கிறார்கள் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நேற்று அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் வில்பத்து சரணாலய பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
புத்தளத்திலிருந்து எழுவம் குளம் வழியாக மன்னார் நோக்கிச் சென்ற ஊடகவியலாளர்கள் முசலி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட மறிச்சிக்கட்டி கிராமத்தை அண்மித்தபோது சரணாலயத்துக்கு அண்மித்த பகுதியில் மக்கள் மீளக்குடியேறியிருந்தமையை காணக் கூடியதாகவிருந்தது. எனினும், அவர்கள் தமது முன்னோர்கள் குடியிருந்த பகுதியிலேயே மீண்டும் மீள்குடியேறி யுள்ளதாக தெரிவித்தனர். மறிச்சிக்கட்டி ஜஸ்சின் சிட்டி பள்ளிவாசலுக்கு அருகே ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரிசாட் பதியுதீன், வில்பத்து சரணாலயத்துக்கு வெளியே மக்களை குடியேற்றியிருக்கிறோமே தவிர எவரையும் சரணாலய பகுதிக்குள் குடியேற்றவில்லை. பொதுபலசேனாவின் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.