அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தொண்டு நிறுவனம், விடத்தல்தீவு, கோதாவரிகட்டில் நிர்மாணித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்ட “மக்தூம் விலேஜ்” கிராமத்துக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் மீண்டும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு மீள்குடியேறியுள்ள மக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இந்தப் பிரதேசம் கடலோரத்தில் இருப்பதால் மீன்பிடிப்பதற்கு வசதியாக இறங்குதுறையை ஆழமாக்கித்தருமாறும், பெருமழை காலங்களில் குடியிருப்புக்குள் வெள்ளம் வராமல் இருப்பதற்காக, பலமான அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கு உதவுமாறும், மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், மீனவர்கள் தமது தொழிலை விருத்தி செய்வதற்கான இன்னோரன்ன வசதிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வீதிமின் விளக்குகள் பொருத்துதல் மற்றும் உள்வீதிகள் அமைப்பு போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் ஒன்றையும் அமைச்சர் விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்தராஜா (அன்டன்), மாந்தை உப்புகூட்டுத்தாபனத் தலைவர் எம்.எம்.எம்.அமீன், வடமாகாண மஜ்லிசுஸ் சூரா தலைவர் முபாரக் மௌலவி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சனூஸ் மற்றும் ஆதிர் கலீல் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சரின் ஊடகப்பிரிவு