வாக்குகளை மையமாக கொண்டு மக்கள் காங்கிரஸ் அரசியல் நடத்தவில்லை…
அம்பாறை முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் றிஷாட்.
வாக்குகளை எதிர்பார்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் மக்களின் நலனை மையமாக வைத்தே தமது கட்சி பணிபுரிந்து வருவதாகவும் அக்கட்சியின் தலைவர்- அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெளிவு படக்கூறினார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளின் கட்சியின் முக்கியஸ்தர்கள் , ஆதரவாளர்களுடனான சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்
கட்சியின் தவிசாளர் ,பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட கட்சியின் அமைப்பாளர்களான கலாநிதி ஜமீல், சிராஸ் மீராஸாஹிப்,முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில், முன்னாள் எம் பி அப்துல் மஜீத், சிரேஷ்ட ஊடகவியாளர் ஏ.அர்.எம். ஜிப்ரி.உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள், வட்டாரக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டனர்.
மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான செயலாளர் சுபைர்தீன், எம்,பிக்களான அப்துல்லா மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் ,டொக்டர். அனீஸ் .டொக்டர் ஷாபி, முத்துமுகம்மது, அலிக்கான் ஷரீப், அகியோர் உட்பட பலர் பங்கேற்று இருந்தனர் .
மக்கள் காங்கிரசை ஆரம்பித்து நீண்டகாலங்களின் பின்னரேயே அம்பாறை மாவட்டத்துக்குள் அரசியல் செய்வதற்காக ஊடுருவினோம் ” எவரையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காகவோ, எந்தக் கட்சிக்கும் சவாலாக இருந்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவோ நாம் இந்த மாவட்டத்திற்குள் நுழைய வில்லை
மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்டவர்களும் நீண்டகாலமாக எமது பணிகளை தூரத்தில் நின்று அவதானித்தவர்களும் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து வாக்களித்து ஏமாற்றப்பட்டவர்களும் எம்மை இந்த மாவட்டத்துக்கு வந்து அரசியல் செய்யுமாறு கடந்த பொதுத்தேர்தல் காலத்திலே எம்மை அன்புடன் கோரியதனாலேயே மயில் சின்னத்தில் தனியாக களம் இறங்கினோம். அந்தத்தேர்தலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாகிய போதும் ,இந்தப்பிரதேசத்தில் ஒரு பாதையேனும் நாங்கள் புனரைமைக்காது பெற்றுக்கொண்ட 33ஆயிரம் வாக்குகளை பெறுமதியானதாகவே கருதுகின்றோம் அந்த வேளையில் எமதுகட்சிக்கு என இங்கு ஒரு தனியான, சிறப்பான எந்த கட்டமைப்பு இல்லாத நிலையிலும் கூட நீங்கள், உங்களையே உருக்கி இந்த வாக்குகளை பெற்று தந்தீர்கள்.
தேர்தல் காலத்தில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை ஒரு போதும் மீறாமாட்டோம். தேர்தலின் பின்னர் இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாம் அக்கறைகாட்டி வருகிறோம்.எனினும் தமது அரசியல் இருப்பு பாதிக்கப்படும் என்ற பயத்தில் இங்கிருக்கும் அதிகாரம் பெற்ற அரசியல் வாதிகள் நாம் மேற்கொள்ளா முனைகின்ற திட்டங்களை தடுப்பதில் குறியாய் இருக்கின்றனர்.சில முயற்சிகள் கைகூடி வந்த பின்னர் அதனை முடக்கியும் உள்ளனர்.
எத்தனை தடைகள் வந்தாலும் மக்களின் உதவியுடன் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து இந்த பிரதேச மக்களின் வாழ்வியல் துன்பங்களுக்கு முடிந்தவரையில்,இறைவன் உதவியால் விடிவு பெற்று கொடுக்க நாம் உறுதிபூண்டுள்ளோம்.
அபிவிருத்தி ஒருபுறம் இருக்கட்டும், இந்த பிரதேசமக்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரத்தை தந்திரோபாயமாக தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு மக்களின் நலனில் அக்கறை காட்டாமல் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை,எமது கட்சியின் இந்த பிராந்திய வருகை தட்டி எழுப்பி,இங்கு அடிக்கடி ஓடிவர செய்துள்ளது. பீதியடைய செய்துள்ளது அதனால் அவர்கள் உங்களை நாடி வர வழி ஏற்பட்டுள்ளது.
இது எமது கட்சிக்கு இந்த பிரதேசத்தில் கிடைத்த வெற்றியாகவும் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவுமே நாம் பார்க்கின்றோம்.
மக்களுக்காகவே கட்சி இருக்க வேண்டும் மக்களின் நலன்களையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காகவே கட்சி முக்கியஸ்தர்கள் இயங்கவேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த விடயத்தில் கண்டிப்பாகவே இருக்கும் எனவும் அமைச்சர் கூறினார்..