வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியேற்ற வேண்டும் என்று மேல், கிழக்கு, மத்திய மாகாண சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முஸ்லிம் மக்கள் பிரநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வடக்கு முஸ்லிம்களை மீள் குடியேற்றும் விடயத்தில் நேற்று (04) இரவு அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தலைமையில் வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில் அனைத்து கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் கூட்டமொன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தல் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக – பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எம். எஸ். அஸ்லம், மாகாண சபை உறுப்பினர்களான மேல் மாகாண சபை அர்சத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி சார்பாக அனர்த்த நிவாரண அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி மற்றும் பைசர் முஸ்தபா கலந்து கொன்டனர்.
ஜ.தே.கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், மேல் மாகாண சபை உறுப்பினர் பைருஸ் ஹாஜி, மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இரு முஸ்லி ம் உறுப்பினர்கள், பேருவளை நகர சபைத் தலைவர் மசாஹிம், எஸ்.எஸ்.பி மஜீத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் யூ.எல்.எம் பாருக், திருமலை மஹ்ருப் ஆகியோர்களும் உட்பட பல்வேறு முன்னாள் உள்ளுராட்சி சபைகளது உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்துடன், நுஆக் கட்சியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். சுஹைர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மற்றும் நல்லாட்சிக்கான கட்சி மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் மற்றும் அகில இலங்கை மக்கள் கட்சியின் பிரதியமைச்சர் அமீர் அலி, செயலாளர் வை.எல். எஸ் ஹமீட் மற்றும் இளம் சட்டத்தரணிகள் கொண்ட ஆர்.ஆர். அமைப்பின் சட்டத்தரனி சிறாஸ் நூர்த்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டு இங்கு கருத்துக்களை தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியேற்றல் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். இவ்விடயம் அமைச்சர் றிசாத்தின் தனிப்பட்ட விடயம் அல்ல. இது இந்த நாட்டில் வாழும் நமது சகோதரர்களின் வாழ்வாதார மற்றும் சமுகப் பிரச்சினையும் ஆகும். அத்துடன் கிழக்கில் இது சம்பந்தமாக இளைஞர்களுக்கு தெளிவூட்டப்படும் எனவும் ஜெமீல் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா கருத்து தெரிவிக்கையில், இந்த விடயத்தினை அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மட்டும் அணுகாமல் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி கடந்த காலத்தில் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இயங்கியது போன்று இவ் விடயத்திலும் ஒரு தீர்மானம் எடுத்தல் வேண்டும். இவ் விடயம் ஜனாதிபதி மற்றும் பௌத்த மக்களிடம் சரியான முறையில் தெளிவுபடுத்தப்படல் வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் உரையாற்றுகையில், வில்பத்து மறிச்சிகட்டு என்னும் பூமி 18 ஆம் நூற்றாண்டில் இருந்து எனது பரம்பரை வாழ்ந்த இடம். அதற்கான சகல தஸ்தாவேஜூகளும் என்னிடம் உள்ளது. இங்கு காண்பிக்கப்பட்ட பவர் பொயிண்ட் காட்சி விடயத்தில் என்னையும் இவர்கள் கலந்து ஆலோசித்திருத்தல் வேண்டும். அமைச்சர் றிசாத் மட்டும் தனித்து இயங்குகின்றார். இப்பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவனாக கடந்த 6 வருடங்களாக நான் செயற்பட்டவன் என்றும் இந்த நிகழ்ச்சியில் கூட அமைச்சர் றிசாத் பதியுத்தீன் இணைப்பாளர்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அவரது இணைப்பாளர்கள் இங்கு பேசுவதற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
பைருஸ் ஹாஜி குறிப்பிடுகையில், மேல் மாகணத்தில் எதிர்வரும் கூட்டத் தொடரில் வில்பத்து மற்றும் வடக்கு முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் சம்பந்தமாக தீர்மானமொன்றை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். இன்றைய நிகழ்வுக்கு வந்ததன் பின்னர்தான் மன்னார் மக்களது பிரச்சினைகள் எனக்கு தெளிவாக தெரிந்தது. இவ்விடயத்தில் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவை வெளிச்சத்துக்கு வராமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சரையே தவறாக புரிந்து கொண்டிருந்தேன். இதனையே எமது சிங்கள சகோதரர்களும் புரிந்து வைத்துள்ளார்கள்.
மத்திய மாகாணத்தில் உள்ள இரு முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து மத்திய மாகாணத்திலும் தீர்மானமொன்றை நிறைவேற்றி அதனை பிரதமர், ஜனாதிபதிக்கு அனுப்புவதாக தெரிவித்தனர்.
அத்துடன் 2 இலட்சம் பேரின் கையெழுத்தை திரட்டி அதனை அரசுக்கும் ஏனையோருக்கும் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்தல் வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பவர் பொயின்ட் ஊடாக காட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களது பிரச்சினைகளை சிங்கள ஊடகங்களிலும் தெளிவுபடுத்தினால் சிங்கள மக்கள் இது விடயத்தில் தெளிவு பெறுவார்கள். அவர்களுக்கு இவ்விடயம் பிழையாக காட்டப்பட்டு வருகின்றது எனவும் பேருவளை அம்ஜத் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினர் எஸ்.எஸ்.பி மஜீத், ஏ.எச்.எம் அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.
மேலும் எதிர்வரும் யிற்றுக் கிழமை மறிச்சுக்கட்டி வில்பத்து போன்ற பிரதேசங்களுக்கு இங்கு வருகை தந்தவர்கள் செல்வது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இறுதியாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அங்குள்ள மக்கள் படும் கஷ்டம், அம்மக்களது வாழ்வாதார பிரச்சினைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *