வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் இடம் பெயர்வுகளுக்குள்ளான மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் துரித நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பது தொடரபில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் அவர்களிடத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோளினை முன் வைத்துள்ளார்.
இன்று மீள்குடியேற்ற அமைச்சரை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் சந்தித்து நடத்திய கலந்துரையாடலின் போதே மேற்கண்ட வேண்டுகோளை அமைச்சர் றிசாத் முன் வைத்ததாக அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சரின் ஆலோஷகர் பிரட்டன் வீரகோண்,அமைச்சின் செயலாளர் திருமதி.ரன்ஞனி,மேலதிக செயலாளர் நயிமுதீன்,மீள்குடியேற்ற அதிகார சபை தலைவர் ஹரீம் பீரிஸ்,சிரேஷ்ட ஆலோசகர் வாமதேவன்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா உட்பட அதிகாரிகளும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
தான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் இதன் போது மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதனுக்கு விளக்கப்படுத்தினார்.இறுதி யுத்தத்தின் போது இடம் பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியேற்றம் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுத்து சென்றதாகவும்.இதற்கு அரசாங்கத்தினதும்,அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் இதன் போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளை தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாத பிரதேசங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன்,இது தொடர்பில் அமைச்சர் சுவாமி நாதன் வன்னி மாவட்டத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பினனையும் முன் வைத்தார்.மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்ற அடிப்படை வசதிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய மீள்குடியேறும் மக்களுக்கான தற்காலிக விடுகளை அமைத்து கொடுப்பதற்கு தேவையான உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் தமது முழுமையான கவனத்தை செலுத்துவதாக தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமி நாதன் இந்த பணிகளை முன்னெடுக்கும் வகையில் அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றினையும் அமைப்பதாக உறுதியளித்தார்.