வடக்கில் வில்பத்து தேசிய வன பிரதேசத்தில் ‘ஜாசிம் சிட்டி’ எனும் பெயரில் முஸ்லிம் குடியேற்றமொன்று சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ள 15 முஸ்லிம் அமைப்புகள் விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளை உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரியுள்ளன.
குறிப்பிட்ட மகஜரில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை, முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, தேசிய சூரா கவுன்சில், முஸ்லிம்களின் செயலகம், முஸ்லிம் மீடியாபோரம், ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமி, ஐக்கிய முஸ்லிம் உம்மா, மஜீலிஸூல் சூரா, நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம், கிரசன்ட் பவுண்டேசன் மற்றும் சைலான் முஸ்லிம் வாலிப இயக்கம் ஆகிய இயக்கங்கள் கையொப்பமிட்டுள்ளன.
குறிப்பிட்ட மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுபலசேனா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். அண்மைக்காலமாக வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிரான தவறான கருத்துகளை பொதுபலசேனா பரப்பிவருகிறது.
1990ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு மறக்கப்பட்ட மக்களாக அகதிகள் முகாம்களில் வாழ்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் இராணுவத்தினால் தோற்கடிக்கப்பட்ட பின்பு சுமார் 35 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமது பூர்வீக இடத்துக்கு மீள்குடியேற கனவு கண்டார்கள். இவர்களில் 22 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற பதிவு செய்துகொண்டார்கள். தேவையான காணிகள் இன்மையால் 22 ஆயிரம் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் குடியேற முடியாதுள்ளது. யுத்தத்துக்கு முன்னராக வெளியேற்றப்பட்ட பழைய அகதிகளான இவர்களுக்கு ஐ.நா. நிதி உதவிகளும் வழங்கப்படவில்லை.
அரசாங்கம், சர்வதேச சமூகமும் இவர்களும் மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையில் முஸ்லிம் நாடுகளின் நிதி உதவி மூலம் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டன. இதனை இனவாத பெளத்த அமைப்புகள் இலங்கையின் சட்டத்துக்கு முரணான வகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு உதவிகள் என குற்றம் சுமத்துகின்றன.
யுத்தத்தின் காரணமாக குடியிருப்பாளர்களால் கைவிடப்பட்ட இடங்கள் காடுகளாக மாறியுள்ளன. மற்றும் பாதுகாப்பு தரப்பினர் காணிகளை கையேற்றுள்ளனர். அத்தோடு வேறும் பலர் பலவந்தமாக காணிகளை கையேற்றிருக்கின்றனர். இந்த விடயங்களை நாம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மாங்குளத்திலும், மறிச்சிக்கட்டியிலும் 700 ஏக்கர் காணியினை கடற்படை கையேற்றுள்ளது. சிலாவத்துறையில் பள்ளிவாசலுடன்கூடிய காணியையும் கையேற்றுள்ளது.
1990க்கு முன்பு முஸ்லிம்கள் விவசாயம் செய்த காணிகள் தற்போது வனப் பிரதேசம் என வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காணிக்கு உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து தமக்கு காணிகளை பெற்றுத் தருமாறு பிரதேச செயலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதில் மீள் குடியேற திட்டமிட்டுள்ளார்கள். மீள் குடியேறியுள்ளவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக மீள்குடியேறவில்லை. அதற்கான ஆவணங்கள் அனுமதிகள் பிரதேச செயலகங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
கடற்படையினால் சுமார் 100 குடும்பங்களின் காணியில் தற்போது கடற்படையினர் குடியேறியுள்ளார்கள். இதனால் அந்த குடும்பங்கள் வேறு வழியின்றி வில்பத்து எல்லையில் தற்காலிக கொட்டில்கள் அமைத்து குடியேறியுள்ளனர். இவர்கள் ‘ஜாஸிம் சிட்டி’ வீட்டுத் திட்டத்திற்கு உரித்தானவர்களல்ல. சட்டவிரோதமான குடியிருப்புகளை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இவ்வாறு குடியிருப்பவர்கள் காணிகள் வழங்கப்பட்டதும் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா இவ்வாறான உண்மை நிலையினை அறியாது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராக ஊடகங்கள் மூலம் தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றன. மோசமான அறிக்கைகளையும் வெளியிடுகின்றன. இது கவலைக்குரியதாகும்.
முஸ்லிம் சமுதாயம் நாட்டில் சட்டம் நிலைநாட்டப்படுவதுடன் தீவிரவாதக் குழுக்கள் சட்டத்தை தங்கள் கரங்களில் எடுத்து செயற்படக்கூடாது. அது தடைசெய்யப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.