நலிவடைந்த மக்களுக்கு பணியாற்றுகின்ற போது அதிலும் அரசியல் சாயத்தினை பூசி லாபம் தேடும் சக்திகளை அடையாளம் காண வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
தமது அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் யுவதிகளுக்கான தையல் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களுக்கான தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 6 மாதகாலமாக இடம் பெற்ற தையல் பயிற்சியினையடுத்து அவர்களால் தயாரிக்கப்பட்ட பலர்வேறு தைத்த ஆடைகளின் கண்காட்சியினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பார்வையிட்டார்.
மேலும் தலைவர் றிசாத் பதியுதீன் தமதுரையில் கூறியதாவது –
இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் இந்த முல்லைத்தீவு இருந்த நிலைப்பற்றி வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தம்பி விஜின்தன் கூறியதை நீங்கள் அறிவீர்கள்,அன்று முல்லைத்தீவு மக்கள் முள்ளி வாய்க்கால் ஊடாக ஓமந்தையினை வந்தடைந்த நிகழ்வுகள் இன்னும் அழியாத சரித்திரமாக இருக்கின்றது.அதன் பிற்பாடு நாம் உங்களை மெனிக் பார்ம் பிரதேசத்தில் பல நலன் புரி நிலையங்களை அமைத்து தங்க வைத்தோம்.
அன்றைய நேரம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது கல்வியினை தொடர முடியாத நிலையேற்பட்டது,இதனை கவனத்திற் கொண்டு கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலைகளின் ஆசிரியர்கள் பலரை நாம் இங்கு அழைத்துவந்து கற்றல் செயற்படுகளை முன்னெடுத்தோம்,இந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை பார்த்த போது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
எம்மைப் பொருத்த வரையில் நாம் இந்த மாவட்ட மக்களுக்கு பணியாற்றவே அரசியலுக்கு வந்தேன்..அதில் தமிழர்கள்,முஸ்லிம்கள்,சிங்களவர்கள் என்ற பேதங்களை பார்ப்பதில்லை.ஏனெனில் நான் ஒரு இஸ்லாமியன் எனது மதம் ஏனைய மதத்தவர்களுக்கு அன்பு காட்டுமாறும்,கஷ்டத்திலும்,துன்பத்திலும் உதவி செய்யுமாறு கூறுகின்றது.அதனை நாம் பின்பற்றிவருகின்றேன்.
இந்த உலகில் நாம் மக்களுக்கு பணி செய்வுத அவர்களிடத்தில் பிரதி உபகாரங்களை எதிர்பார்த்து அல்ல,எத்தனையோ அபிவிருத்திகளை செய்துள்ளேன்.அதனை திற்நது வைப்பதற்கு கூட நான் வருவதில்லை,ஏனெ்றால் திறப்பு விழாக்களை விட அது மக்களுக்கு சரியாக செல்கின்றதா என்ற விடயத்தில் நான் கொள்கை ரீதியான கருத்தை கொண்டவன்,
எமது பணிகளை இன்று பலர் தடுக்கும் வேலைகளை செய்கின்றனர்.அது அவர்கள் இந்த மக்களுக்கு இழைக்கும் அநீதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தானும்,செய்வதில்லை,பிறரையும் செய்ய விடுவதில்லை என்ற மொழிக்கொப்ப அவர்கள் செயற்படுவதாக கூறிய அமைச்சர்,இந்த பிரதேச யுவதிகளக்காக வேண்டிய பல புதிய தொழில்,வாய்ப்புக்களை உருவாக்க எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரபலமான ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்கச் செய்ய முதற்கட்டமாக 2 கோடி ரூபாய்களை எனது அமைச்சின் மூலம் ஒதுக்கியுள்ளேன்.அடுத்த வருடம் இதற்கென 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கான அனுமதியினை வழங்கியுள்ளேன்.இதன் மூலம் நேரடியாக 200 பேர்கள் தொழிலினை பெறுவார்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது கூறினார்