பிரதேசசெயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளையும், தீர்மானங்களையும் அடுத்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் வகையில், திணைக்கள அதிகாரிகளும், நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று இணைத்தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்  (30/09/2016) அன்று பணிப்புரை விடுத்தார்.

 

முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், நானாட்டான் பிரதேசசபை செயலாளரும், முசலி பிரதேசசபை பதில் செயலாளருமான மரியதாசன் பரமதாசனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான முதலமைச்சரின் பிரதிநிதியும், மாகாண அமைச்சருமான டெனீஸ்வரன், சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி, மற்றும் மஸ்தான் எம்.பி ஆகியோரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

 

இவ்வாண்டு இந்தப் பிரதேச செயலகத்துக்கு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட, ரூபா 32.5 மில்லியன் நிதிக்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

 

14542715_652581301574585_1844003582_n

 

கல்வி, சுகாதார வசதி, நீர்ப்பாசனம், குளங்கள் புனரமைப்பு, மின் இணைப்பு, நீர் வழங்கல், தாய்-சேய் நலம், வைத்தியசாலைகளில் வளப்பற்றாக்குறை மற்றும் இன்னோரன்ன துறைகளில் அவ்வவ் திணைக்களங்களின் அதிகாரிகள், தமது செயற்பாடுகள் குறித்தும், எதிர்கால முயற்சிகள் குறித்தும் விளக்கினர்.

 

கிராம சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமது ஊரில் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்களை எடுத்துரைத்த போது, கூட்டத்தை வழி நடாத்தியவர்கள், அந்தப் பிரச்சினைகள் பலவற்றுக்கு உடனுக்குடன் தீர்வைப் பெற்றுக்கொடுத்தனர்.

 

தீர்வுகள் காணப்படாத பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகள், அந்தப் பிரதேசங்களுக்குச் சென்று குறித்த பிரச்சினைகள் தொடர்பில் பள்ளிவாசல்கள், கோவில் நிர்வாகம் மற்றும் சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகளை அழைத்து, உரிய தீர்வை காணுமாறு அமைச்சர் றிசாத் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

 

14527485_652581384907910_2079526628_n

 

யுத்த காலத்தில் முசலி பிரதேசத்தில் செயலிழந்துபோன பல்வேறு நிறுவனங்களின் கட்டடங்களை புனரமைத்து, மீண்டும் அதே இடத்தில் அந்த நிறுவனங்களை இயங்கச் செய்வதற்கான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென, அமைச்சர் றிசாத் பதியுதீனால் கூட்டத்தில் முன்வைக்கப்பட யோசனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

 

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசம் உட்பட ஏனைய பிரதேசங்களிலும், நீர்ப் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும், இதற்காக கொண்டுவரப்படவுள்ள நிரந்தரமான நீர்த் திட்டம், இந்த மாவட்ட மக்களின் நீர்ப் பற்றாக்குறையை பூர்த்தி செய்யுமென அவர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

 

நீரில்லாப் பிரச்சினையை ஓரளவு தீர்க்கும் வகையில், தான் கடந்த காலங்களில் தற்காலிகமாக நடைமுறைப்படுத்திய நீர் வழங்கல் திட்டத்தை நினைவுபடுத்திய அமைச்சர், இந்தப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்படுமென மீண்டும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *