மன்னார் – முசலி பிரதேசத்தை நவீன நகராக மாற்றியமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க நகர அபிவிருத்தி அதிகார சபை இன்று விஷேட குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்குமிடையில் இன்று கொழும்பில் இடம் பெற்ற விஷேட சந்திப்பை அடுத்தே குறித்த குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
30 வருடகால யுத்தம் காரணமாக மிக மோசமாக அழிந்து போயிருந்த முசலி பிரதேசத்தை நவீன நகராக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பலவருடகாலமாக ஈடுபட்டு வரும் நிலையிலேயே நகர அபிவிருத்தி அதிகார சபையும் தற்போது அமைச்சரின் அந்த வேலைத் திட்டங்களுக்கு கைக்கொடுக்க முன்வந்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவரால் நியமிக்கப்பட்டிருக்கும் விஷேட குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மன்னார் – முசலி பிரதேசத்துக்கு நேரடியாக விஜயம் செய்து முசலி நவீன நகர திட்டமிடல் குறித்து ஆராய்வதுடன் அது தொடர்பான விரிவான திட்டப் பணிகளிலும் ஈடுபடவுள்ளது.
மேற்படி, முசலி பிரதேசத்தை நவீன நகராக மாற்றியமைக்கும் திட்டமானது குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இச்சந்திப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர், முசலி பிரதேச சபைத் தலைவர் எஹியா பாய் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இப்ராஹிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.