மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் ஓலைத் தொடுவாவில் வருடமொன்றுக்கு 750 மில்லியன் ரூபா வருமானம் பெறக்கூடிய அட்டைப் பண்ணைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதம விருந்தினராக கலந்துகொண்டார், மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் எம்.பிக்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், மஸ்தான் ஆகியோரும் அதிதிகளாக பங்கேற்றனர்.
அமைச்சர் றிசாட் உரையாற்றிய போது ‘மன்னார் மாவட்ட மீனவர் சமூதாயத்தின் மற்றுமொரு மைல்கல்லாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். அட்டைத்தொழிலில் ஈடுபட்டு வந்தோருக்கு இது ஒரு அதிர்ஸ்டமாக இருக்கின்றது. இந்த அட்டைப்பண்ணையை இங்கு உருவாக்க நாங்கள் முயற்சித்தபோது மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவோர் அச்சமடைந்தனர். 2010 ஆம் ஆண்டு இந்த தொழில் முயற்சிக்கு நெக்டா நிறுவனம் இந்தப் பிரதேசத்தில் ஒரு ஏக்கர் காணி கேட்டபோது மீனவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. எனினும் அவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தியபின்னர் இந்த முயற்சி அதிகார பூர்வமாக சூழல் அறிக்கைகளை பெற்றுக் கொண்ட பின்னர் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகாணப்பட்டுள்ளது.
கடலட்டைகளை நாற்று வளர்ப்புமேடைகளில் வளர்த்து தொழிலாளர்களின் வாழ்வையும், வளத்தையும் பெருக்கும் வகையில் இந்த சிறப்பான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னாரை ஒத்த கஸ்;டப் பிரதேசங்களில் வளர்ந்து அரசியலில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அமைச்சராகவிருக்கும் மஹிந்த அமரவீரவிற்கும் நெக்டா, நாரா நிறுவன அதிகாரிகளுக்கும் மீனவர்களின் சாரபில் எனது நன்றிகளை வெளிப்படுத்துகின்றேன்.
கடந்தவாரம் மன்னாரிலே என்னை சந்தித்த மீனவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் சவால்களைத் தெரிவித்தனர். மீன்பிடி முறைகளைக் கையாள்வதில் 18 வகையான தடைகள் போடப்பட்டுள்ளதாகவும் நீண்ட காலமாக தொழிலில் ஈடுபடும் எங்களுக்கு இவ்வாறான அழுத்தங்கள் இருப்பதால் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். அதனை நான் அமைச்சருக்குத் தெளிவு படுத்தியுள்ளேன். மீனவர்களும் மனச்சாட்சியுடனும் மனிதனாபிமானத்துடனும் செயற்படவேண்டியது கடனாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நீண்டகால திட்டம் அவசியமாகின்றது.
அவசர அவசரமான அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகளும் பிழையான முடிவுகளும்; எல்லோருக்கும் ஆபத்தையே ஏற்படுத்தும். மீனவ சமூதாயமும் மீனவ அமைச்சும் ஒருவருக்கொருவர பரஸ்பர ஒத்துழைப்புடனும் பொறுப்புடனும் செயற்படுவதே தார்மீகக் கடமையாகும். அமைச்சர் அமரவீர மக்களின் கஸ்டங்களை உணர்ந்து செயற்படுபவராக, தீர்த்துவைப்பவராக இருக்கின்ற போதும் கடற்றொழில் அமைச்சில் மீனவர்கள் தமது பணிகளை நிறைவேற்றச் செல்லும் போது கஸ்டங்களை எதிர் நோக்கியது கடந்தகால கசப்பான உண்மை, எனினும் மக்களுக்காகவே அரசியல் வாதிகள் இருக்கின்றனர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் மஹிந்த அமரவீர நிரூபித்துக் காட்டியுள்ளார். பாராளுமன்றத்தல் அருகருகே ஆசனங்களில் இருக்கும் அவரும் நானும் மீனவர்களின் பிரச்சினையை அலசி ஆராய்வோம். அதேபோன்று மாகாண அமைச்சர் டெனீஸ்வரனுடனும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பில் பேசியிருக்கிறேன். மாகாண அமைச்சரினதும் மத்திய அமைச்சரினதும் உதவியுடனும் எனது ஒத்துழைப்புடனும் மாந்தைப் பிரதேசத்தின் பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பெற்று நன்னீர் மீன்வளர்ப்பையும் கடற்றொழில் விரிவாக்கத்தையும் மேற்கொண்டு தொழில்வாய்பை பெருக்கவுள்ளோம். மத்திய அரசும் மாகாண அரசும் முரண்படாமல் செயற்படுவதன் மூலமே அபிவிருத்தித் திட்டங்களை இலகுவாக முன்னெடுக்க முடியுமென்ற முன்னுதாரணத்திற்கு அமைச்சர் அமர வீரவும் மாகாண அமைச்சர் டெனீஸ்வரனும் சான்று. இந்த ஒருமைப்பாடு வடக்கு மீனவர்களின் வாழ்விற்கு கிடைத்த வரப்பிரசாதமென நான் நம்புகின்றேன் என அமைச்சர் ரிசாட் தெரிவித்தார்.