இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி பி அபயகோனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி பி அபயகோனை நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறக்காமத்தில் ஏற்பட்டுள்ள நிலமைகளை எடுத்துக் கூறியதுடன் விகாரை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டால் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு வழி ஏற்படுமெனவும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அற்றுப் போகுமெனவும் தெரிவித்தார்.

அமைச்சருடனான இந்த சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியும் பங்கேற்றிருந்தார்.

ஜனாதிபதியின் செயலாளாரிடம் இறக்காமத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபித்த அமைச்சர், இந்த நடவடிக்கை மூலம் அம்பாறை மாவட்டத்தில் காலா காலமாக இருந்த சிங்கள முஸ்லிம் நல்லுறவுக்கு குந்தகம் ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இரண்டு இனங்களையும் நிரந்தரமாக பிரிப்பதற்கான ஒரு முயற்சியாகவே நாம் கருதுகின்றோம். இஸ்லாம் மார்க்கம் ஏனைய மதங்களை கௌரவிக்குமாறே வலியுருத்துவதாகவும் ஆனால் இந்த முயற்சி வேண்டுமென்றே முஸ்லிம்களை சீண்டுவதற்காக மேற்கொள்ளப்படுவதாக முஸ்லிம்கள் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஜனாதிபதி மைத்திரிக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவு தெரிவித்து ஆட்சி மாற்றத்திற்கு உதவியுள்ள போதும், தர்போது நடைபெற்றுவரும் செயற்பாடுகள் முஸ்லிம்களை நேரடியாக பாதித்து வருவதாக அவர் கூறினார்.

ஏற்கனவே நாங்கள் பல தடவை சுட்டிக்காட்டியவாறு வில்பத்து வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாகவும் இந்தப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு கண்டு அங்கு வாழும் முஸ்லிம்களை நிம்மதியாக தமது பூர்வீக நிலங்களை குடியிருப்பதற்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *