அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாம் அமைத்துள்ள கூட்டமைப்பில் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிடுமாறு, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக சில குருட்டு ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பரப்பி வருவதாகவும், இது அப்பட்டமான பொய்யாகும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் அகதிமக்கள் மத்தியில், இன்று மாலை (22) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சஜித் பிரேமதாச என்னைச் சந்தித்தபோது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனித்து போட்டியிட வேண்டாமெனவும் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுமாறும் கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த நான், எமது கட்சி சில மாவட்டங்களில் உங்கள் தலைமையிலான கூட்டமைப்பிலும், சில மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடும் எனத் தெரிவித்தேன். சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு நாங்கள் செயல்பட முடிவு செய்துள்ளோமென தெரிவித்தேன். இதுதான் உண்மை. எனினும், என்னையும் எனது கட்சியையும் எப்படியாவது அழித்துவிட வேண்டுமென்று அலைந்து திரிகின்ற இனவாத ஊடகங்கள், இந்த விடயத்தை திரிபுபடுத்தி, பொய்களைப் புனைந்து வதந்திகளை பரப்பியுள்ளன. அந்த ஊடகங்களின் செய்திகளில் இந்தப் புரளிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் மக்கள் காங்கிரஸின் வகிபாகம் என்னவென்பதிலும், அக்கட்சியின் முக்கியத்துவம் எந்தளவென்பதிலும் சஜித் பிரேமதாசவுக்கு தெளிவான விளக்கம் உண்டு.

புத்தளத்தில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான அகதி முகாம்கள் இன்று கிராமங்களாகவும், மாதிரிக் கிராமங்களாகவும் காட்சிதருவதற்கு, வன்னி சமூகம் நமக்குப் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரமே பிரதான காரணம். அகதிகளாக நாம் வந்தபோது, நமது பூர்வீகக் கிராமங்கள் இருந்த நிலையிலும் ஒருபடி மேலாக, புத்தளத்தின் பல அகதி கிராமங்கள் வளர்ச்சி கண்டன என்ற உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. உறுதி இல்லாத காணிகளில் கொட்டில்களை அமைத்திருந்தோம். மின்சாரமும் குடிநீரும் இல்லாத வாழ்க்கையும் நமக்கு அப்போது இருந்தது. இடநெருக்கடியுடன் பாடசாலைக் கல்விக்காக ஏங்கித்தவித்த மாணவர்களுக்கும் சுகாதார வசதிக் குறைபாட்டுடன் இருந்தவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

எனினும், வடக்கில் அமைதி ஏற்பட்டு சமாதானம் பிறந்த பிறகு, எமது மண்ணில் மீளக்குடியேறும் தார்மீகத் தேவை நமக்கு இருந்தது. சொந்த மண்ணில் வாழக்கூடாதென்றே எம்மை விரட்டியடித்தனர். எனவேதான் அதற்கு மாற்றமாக, சவால்களுக்கும் தடைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், மீண்டும் நமது தாயக மண்ணில் கால் பதித்தோம். விரட்டியவர்களின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்தோம். துரத்தப்பட்ட நோக்கத்தை தகர்த்தோம். வேரொடு பிடுங்கப்பட்டு விரட்டப்பட்ட நாம், மீண்டும் குடியேறுவதில் வெற்றிகண்டோம்.

வன்னிப் பிரதேசத்தில் அபிவிருத்தியில் கூடிய கரிசனை செலுத்தியதனால்தான், இந்தப் பிரதேசங்களை மேலும் அபிவிருத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எதிர்வரும் காலங்களில் இவற்றிலும் கூடியகவனம் செலுத்துவோம்.

எமக்கு ஆதரவான வன்னி மாவட்ட சிறுபான்மை சமூகத்தை பிரிக்கவும், விலைகொடுத்து வாங்கவும், அவர்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தவும் ஒரு கூட்டம் திரிகின்றது. இதன்மூலம் எம்மைத் தோற்கடிப்பதும், பழிவாங்குவதும், எமது அதிகாரத்தை பிடுங்குவதும் அதன்மூலம், தாம் நினைத்தவற்றை எல்லாம் சாதிப்பதுமே இவர்களின் இலக்காகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *