பாகிஸ்தான்- இலங்கை இடையே அணு சக்தித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கடந்த வாரம் பாகிஸ்தானில் வைத்து கையெழுத்தாகின. அதன் பின்னர் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்துவது குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன.
பாகிஸ்தான் அணு சக்தி ஆணையம், இலங்கை அணு சக்தி ஆணையம் ஆகியவை இடையேயான ஒப்பந்தம் இவற்றில் குறிப்பிடும்படியானது. இந்தியாவுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் இலங்கை இரு மாதங்களுக்கு முன்னர் கையெழுத்திட்ட நிலையில், தற்போது பாகிஸ்தானுடனும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு, வர்த்தகம், விளையாட்டு, பேரிடர் மீட்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
பாகிஸ்தானுடன் இலங்கை, கடந்த 60 ஆண்டுகளாக உண்மையான நட்பு இருந்து வருகிற நிலைமையில் இரு நாடுகளக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு, கூட்டணி உள்ளிட்டவை இயற்கையோடு இணைந்ததாகும் இலங்கை, பாகிஸ்தான் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் அணுசக்தி ஆணையம் தொடர்பான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதேவேளை பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பதற்கு பாகிஸ்தான்-இலங்கை நாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டின் ஜனாதிபதி மம்னூன் ஹுசேன், பிரதமர நவாஸ் ஷெரீப்; அமைச்சர்கள், வர்த்தக சமூகம் உள்ளிட்ட பல தரப்பினரோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இரு நாட்டு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
சார்க் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகும். இந்நிலையில் இலங்கை- பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையில் உள்ள இராஜதந்திர உறவுகள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாகவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் அமைந்தது. .
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோக பூர்வ சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 05ம் திகதி ஆரம்பித்தார். அவருடன் சென்றவர் என்றவகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்;துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இப்பயணம் குறித்து கொழும்பில் வைத்து கருத்து வெளியிடுகையில் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் ரிஷாட் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
இலங்கை பாகிஸ்தானுக்கிடையிலான இருதரப்பு பரஸ்;பர உறவுகள் உடன்படிக்கையின் பின்னர் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எய்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான எமது வருடாந்த மொத்த வர்த்தகம் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இலங்கை- பாகிஸ்தானுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை 2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் 2005 ஆம் ஆண்டில் 158 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2013 ஆம் ஆண்டு; இறுதியில் 462 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் புள்ளிவிபரங்களில் பதிவாகியுள்ளன. சார்க் வலயத்தில் பாகிஸ்தானும் இந்தியாவைப் பின்பற்றி இலங்கையின் உற்பத்திகளுக்கான 2வது பெரிய கொள்வனவுச் சந்தையாக மாறியுள்ளது.
கணக்கெடுப்புக்களின் படி இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10% பிராந்திய வலய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. பாகிஸ்தானுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 2013ம் ஆண்டளவில் 83.05 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்திருந்தது. இவ்வர்த்தகச் செயன்முறைக்கான பொறிமுறை பாகிஸ்தான் -இலங்கை கூட்டு வர்த்தக ஆணைக்குழு காணப்பட்டது. பாகிஸ்தான் -இலங்கை கூட்டு வர்த்தக ஆணைக்குழு 1974ல் தாபிக்கப்பட்டதுடன், இதன் 11வது செயலமர்வு 2013 நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெற்றது.
பாகிஸ்தான் தற்போது, இலங்கையுடன் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.
460 அமெரிக்க டொலர்கள் பெறுமதிக்கும் மேலாகவும் வர்த்தகம் செய்யக்கூடிய சாதகமான நிலை இரு நாட்டுக்கும் உண்டு. இத்தருணத்தில்; எங்களது இரு தரப்பினரது அடுத்த இலக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான எதிர்பார்ப்பு. பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ள அழைத்த முதல் நாடு இலங்கையே ஆகும். இது இலங்கையின் பிராந்திய கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இலங்கை பாகிஸ்தானுக்கு முன்னுரிமை அளித்து வருவதனை வெளிக்காட்டுவதாய் உள்ளது என கடந்த ஜனவரி 27ம் திகதி இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரேஷி கொழும்பில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்;ற சந்திப்பு ஒன்றின் போது தெரிவித்திருந்தாக அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் புதிய தரிசனத்துடன் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கிறது. இரு தரப்பு உடன்படிக்கைகள் மூலம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவிற்காக எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
இரண்டு நாடுகளுக்குமிடையிலுள்ள அனுபவங்கள், பயிற்சிகள், பயிலுனர் பிரிவுகளில் புலமைப் பரிசில்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன. இலங்கையில் நிலவிவந்த யுத்தத்தினை தோற்கடித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்து வதில் பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விஜயத்தின் போது நன்றி தெரிவித்திருந்தார்.
எமது நாடு பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை அதிகரிப்பது மாத்திரமன்றி அந்நாட்டு மக்களுடனான அன்னியோன்னிய உறவுகளைத் தொடர்ந்தும் பேணவேண்டும் எனவும் பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையின் விமானங்களை கொழும்புக்கு வருமாறு இதன்போது, இலங்கை ஜனாதிபதி அழைப்பும் வழங்கியிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கை – பாகிஸ்தானுக்கிடையிலான வருடாந்த வர்த்தகத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களினால் அதிகரிப்பதற்கான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டப்படுவதற்கான தீர்மானம் எட்டப்பட்டபட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விரு நாடுகளுக்குமிடையில் சுற்றுலாத்துறை, விளையாட்டு, கடல்சார் வர்த்தகம், பொருளாதார அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் போதைப்பொருளை இல்லாதொழித்தல் போன்றவை உள்ளடங்கலாக ஆறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் தனது அயல் நாடுகளுடன் சிறந்த உறவுகளைத் தொடர்ந்தும் பேணவேண்டுமென்றும், இவற்றுள் விஷேடமாக, இலங்கைக்கு முன்னுரிமை வழங்கி உறவை வலுப்படுத்த வேண்டுமென்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.
இவ்விஜயத்தின் இறுதி நாளன்று பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசேன் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் தூதுக்குழுவினருக்கு இராப்போசன விருந்தளித்து கௌரவித்தார்.