புத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு,ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
பிரதமர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடன் தலையிட்டு அந்த மக்களுக்கு நியாயம் பெற்று கொடுக்க வேண்டுமென மன்னாரில் இன்று (15) பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர் முன்னிலையில் வலியுறுத்தினார்.
இந்த பிரச்சினையை நீடிக்க விடாமல் அங்கு வாழுகின்ற மக்களின் பிரதிநிதிகளையும் முக்கியஸ்தர்களையும் பிரதமர் அழைத்து இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தினால் புத்தளம் மக்கள் மிகவும் நொந்து போய் இருக்கின்றார்கள், இந்த ஆட்சியை கொண்டு வருவதிலும், உங்களை பிரதமராக கொண்டுவருவதிலும் அவர்கள் முழுமையான பங்களித்தவர்கள். அது மாத்திரமின்றி இந்த மாவட்டத்திலிருந்து அகதிகளாக சென்ற எங்களை பரிபாலித்து போஷித்தவர்கள்.
புத்தளத்தில் குப்பையை வலுக்கட்டாயமாகவோ? பலாத்காரமாகவோ ? கொண்டு வந்து கொட்ட முடியாது. இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்து தாருங்கள் என்று அமைச்சர் பிரதமரிடம் வேண்டிக்கொண்டார்.
நேற்றும் இன்றும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான செயற்பாட்டுக்கூட்டங்களில் உங்களுடன் நான் இணைந்துள்ளதால், புத்தளம் மக்களின் நியாயமான போராட்டங்களில் என்னால் கலந்து கொள்ள முடியாமலிருப்பதாகவும் புத்தளம் அகதி முகாமிலிருந்தே நானும் பாராளுமன்றத்திற்கு தெரிவானவன் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.