இலாபத்தில் இயங்கிய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பஸ் டிபோக்கள் தற்பொழுது நஷ்டத்தில் இயங்குவதற்கான உரிய காரணத்தைக் கண்டறியுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதன்கிழமை (29) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“வன்னி மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் இல்லையென்று டிப்போ நிர்வாகிகள் கூறுகின்றனர். நாம் அதிகாரத்தில் இருந்தபோது ஓரளவு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டோம். எனவே, டிப்போவில் நிலவும் ஆளணிப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் கண்டு, முறையான சேவையை வழங்குமாறும், அதில் கவனம் செலுத்துமாறும் போக்குவரத்து அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழ்வரும் மன்னார் – புத்தளம் பாதை சுமார் நூறு வருடத்துக்கு மேலாக பழைமை வாய்ந்தது மட்டுமின்றி, வர்த்தமானியிலும் பிரகடனம் செய்யப்பட்ட வீதி அது. 2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தப் பாதை திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இந்தப் பாதையின் மூலம் கொழும்புக்கு வருவதானால் சுமார் நூறு கிலோமீட்டர் குறைவாகும். எனவே, போகவும் வரவும் 200 கிலோமீட்டரை மிச்சப்படுத்தலாம். இது பொருளாதார ரீதியிலும் நமக்குப் பயன்தரும். கடந்த காலத்தில் இந்தப் பாதைக்கு கார்பட் இடும்போது சில சக்திகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் பிறசக்திகளின் உதவியுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் பாதை மூடப்பட்டது. குறித்த பாதையில் இன்னும் முப்பது கிலோமீட்டரே கார்பட் இடப்பட வேண்டும். பாதையை மூடுமாறு அவர்கள் வழக்குத் தாக்கல் செய்யவில்லை, புனரமைக்க வேண்டாமென்றே அவர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். எனவே, நான்கு வருடமாக மூடப்பட்டிருக்கும் இந்தப் பாதையை அவசரமாக திறந்துவிட உதவுங்கள். இதற்காக, சட்டமா அதிபர் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை முக்கியஸ்தர்களை ஒரே மேசையில் அழைத்து, பேச்சுவார்த்தை நடாத்தி நடவடிக்கை எடுங்கள்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் மன்னார், சிலாவத்துறையில் பலநோக்கு மண்டபம் ஒன்றை முன்னர் அமைக்கத் தொடங்கினர். அரைவாசி கட்டிட வேலைகளின் பின்னர் அது நிறுத்தப்பட்டு, நான்கு வருடமாக கட்டிடப் பணிகள் நடைபெறவில்லை. அதேபோன்று, பள்ளிமுனை விளையாட்டரங்கு அரைவாசி கட்டிட வேலைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பான அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்தபோது, வடக்கு, கிழக்கில் சில வீடமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவைகள் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன். மன்னார் நகர 02வது திட்ட செயற்பாட்டை ஆரம்பியுங்கள். அத்துடன், முல்லைத்தீவில் பஸ் தரிப்பிடம் ஒன்றை சிறப்பான முறையில அமைத்து தருமாறு வேண்டுகின்றேன்.
சவூதி அரேபியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட அம்பாறை, நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இன்னும் மக்களுக்கு கையளிக்கப்படாமல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்ட 500 வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் யாவும் உருக்குலைந்துவிட்டன. எனவே, இவற்றை விரைவில் புனரமைத்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள்” என்றார்.