சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கெ.பி.தென்னகோன் தெரிவித்தார்.

 

அமைச்சர் றிசாத் பதியுதீன் எதனோல் வியாபாரம் செய்பவரும் அல்ல. இந்த விடயத்திலும், அமைச்சருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென அவர் மேலும் கூறினார்.

 

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் (11/10/2016) அ ன்று பிற்பகல்
இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

 

இந்த மாநாட்டில் நுகர்வோர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஆர்.டி.டி.அரந்தர, செவனகலை சீனிக் கூட்டுத்தாபனத் தலைவர் நளின் அதிகார ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

 

அமைச்சின் செயலாளர் இங்கு கூறியதாவது,

 

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் சுமார் 36 நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களில் தலைவர், பணிப்பாளர் சபை உயரதிகாரிகள் இருக்கின்றனர். அமைச்சு தொடர்பான செயற்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வினவ முடியும்.

 

இதை விடுத்து ஊடகங்கள் மேலெழுந்தவாரியாக விடயங்களைப் பெற்றுவிட்டு, தாம் விரும்பிய வகையில் செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 

பிழைகள் நடந்திருந்தால் உரிய உயரதிகாரியிடம் அதைக் கேட்டறிந்து, உண்மைகளை தெரிந்த பின்னர் செய்தி வெளியிடுவதே ஊடகங்களின் தார்மீகக் கடமையாகும் என்றார்.

 

சீனி மற்றும் எதனோல் தொடர்பில் அமைச்சரை தொடர்புபடுத்தி வெளியிட்ட செய்தி ஓர் அப்பட்டமான பொய் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த நுகர்வோர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஆர்.டி.டி.அரந்தர கூறியதாவது,

 

நாடளாவிய ரீதியில் பாவனையாளர்களின் நன்மை கருதி திடீர் பரிசோதகர்களை நாங்கள் ஈடுபடுத்தி வருகின்றோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அதிபரின் தலைமையில், பரிசோதனை அதிகாரிகளைக் கொண்ட குழு இயங்கி வருகின்றது. இங்குள்ள அதிகாரிகள் தேடுதல் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு, காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் கட்டுப்பாட்டு விலைகளை மீறும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் மீது  சட்டநடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *