இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

 

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளரும், அமைச்சர் றிசாத் பதியுதீனின் குருநாகல் மாவட்ட பிரதம இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தலைமையில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்கத்துக்கான ஹஜ் விளையாட்டுப் போட்டி மற்றும் சிறுவர்வர்தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அமைச்சர் றிசாத் உரையாற்றினார்.

 

அவர் மேலும் கூறியதாவது;

 

கடந்த 30 ஆண்டு காலமாக இந்நாட்டை உலுக்கிய யுத்தத்தினால் நாம் பட்ட கஷ்டங்கள் ஏராளம். இனியும் நாம் இழப்புக்களை தாங்கிக்கொள்ள முடியாது. யுத்தத்தினால் சிங்கள, தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

 

இந்த நிலையில் நாட்டை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளுக்கு, நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. சுதந்திரத்துக்கு முன்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கிடையே இருந்து வந்த சீரான உறவுகள், பின்னர் பல்வேறு காரணிகளால் சீர்குலைந்தன. இதன் விளைவுகளை நாம் அனுபவித்து வருகின்றோம்.

 

unnamed-1

 

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தாய்நாட்டுக்கு விசுவாசமாக வாழ்ந்தவர்கள். வாழ்ந்து வருபவர்கள். அந்நிய ஆக்கிரமிப்புக்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க சகோதர சமூகங்களுடன் இணைந்து போரிட்டவர்கள். அவர்கள் எக்காலத்திலும் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் அல்லர். தென்னிலங்கையிலும், வடக்கு, கிழக்கிலும் தம்முடன் சேர்ந்து வாழும் சகோதர இனங்களுடன் புரிந்துணர்வுடனும், ஐக்கியத்துடனும் வாழ்ந்து வருபவர்கள்.

 

அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக வசை பாடுவதையே சில இனவாதிகள், தமது தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இஸ்லாத்தையும், முஸ்லிம்களின் கலாசாரத்தையும் கொச்சைப்படுத்துவதை நோக்காகக்கொண்டு செயற்படுகின்றனர். நல்லாட்சி ஏற்பட்ட பின்னர் இனவாதிகளின் செயற்பாடு சிறிதுகாலம் தணிந்திருந்த போதும், மீண்டும் அவர்கள் இனவாதத்தையே பரப்பி வருகின்றனர்.

 

இந்த மாவட்டத்திலுள்ள மும்மண்ண பாடசாலை விவகாரம் இங்குள்ள அரசியல்வாதிகளினால் முறையாகக் கையாளப்பட்டிருந்தால், இவ்வளவு தூரம் இந்த விடயம் பூதாகரமாக ஆகியிருக்காது. எதோ காரணத்துக்காக குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் பொடுபோக்காக இருந்ததினால் ஏற்பட்ட விளைவை இரண்டு இனங்களும் அனுபவிக்கின்றோம்.

 

unnamed-3

 

வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டுமென மீண்டும் ஒருசாரார் குரலெழுப்புகின்றனர். பிரிந்திருக்கும் வடக்கு – கிழக்கு தொடர்ந்தும், அவ்வாறே இருக்கவேண்டும் என்பதிலே மக்கள் காங்கிரசைப் பொறுத்தவரையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் வடக்கு – கிழக்கை இணைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் மிகவும் ஆணித்தரமாகக் கூறுகின்றேன்.

 

குருநாகலில் இன்று நடைபெறும் தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் பௌத்த மதத் தலைவர்களும். சிங்கள சமூகத் தலைவர்களும் கலந்துகொள்வது எனக்கு மிக்கமகிழ்ச்சியைத் தருகின்றது. நமக்கு இப்போது தேவைப்படுவது நல்லிணக்கமே. அந்தவகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்வதில் ஆர்வங்காட்டிய எமது கட்சியின் முக்கியஸ்தரும், குருநாகல் மாவட்டத்தில் மக்கள் காங்கிரசின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடியாக இருக்கும் சகோதரர் அசார்தீனுக்கு, நான் எனது பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.

 

நல்லாட்சியின் பின்னர் நமது நாடு சுமூக நிலைக்குத் திரும்பி வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. 2015 இல் சுமார் 05 இலட்சமாக இருந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை, இந்த வருடம் சுமார் 20 இலட்சத்துக்கு மேலாக காணப்படுகின்றது. அடுத்த வருடம் இந்த இலக்கை இன்னும் அதிகரிக்க முடியுமென நாம் நம்புகின்றோம். இயற்கை வளங்களும், எழில் மிகுந்த காட்சிகளும் சிறந்த அமைவிடமும் கொண்ட நமது நாட்டில், உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதன் மூலம் அந்நியச்செலாவணியை அதிகரிக்க முடியுமென நாம் திடமாக நம்புகின்றோம்.

 

மொழியாலும், மதத்தாலும் நாங்கள் வேறுபட்டிருந்த போதும், இலங்கையர் என்ற எண்ணத்தில் இந்த நாட்டை இதய சுத்தியுடன் கட்டியெழுப்புவதே காலத்தின் தேவையாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக எம்.எச்.எம். நவவி எம்.பி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்ஹ, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்க, முன்னாள் மேயர் காமினி பெரமுனகே, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நசீர், மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான அப்துல் சத்தார், கமல் குணசிங்ஹ, மாவத்தகமை எதிர்க்கட்சித் தலைவர் றிபாழ், மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்டீன், மக்கள் காங்கிரசின் கல்விப் பணிப்பாளர் டாக்டர்.ஷாபி மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

அமைச்சரின் ஊடகப்பிரிவு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *