மௌலவி ஏ.ஆதம் லெப்பை மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொத்துவில் கிளையின் முன்னாள் தலைவர் மௌலவி ஏ.ஆதம் லெப்பை இறையடி சேர்ந்தமை பெரும் கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மௌலவி ஏ.ஆதம் லெப்பைஅவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பொத்துவில் பிரதேசத்தின் பிரதான சொத்துக்களில் மர்ஹூம் ஏ.ஆதம் லெப்பை பிரதானமானவர். ஆசிரியராக, மௌலவியாக மற்றும் சமூக முன்னோடியாகத் திகழ்ந்து அவராற்றிய பணிகள், பொத்துவில் பிரதேச வரலாற்றில் தடம்பிடிக்கும். எந்தப் பணியை செய்வதானாலும் இறைதிருப்தியை முன்னிறுத்தி, சமூக நோக்கை முன்னிலைப்படுத்தி கருமமாற்றிய பெருந்தகை.
எவருடனும் சாதாரணமாகப் பழகிய இவர், மக்கள் மத்தியில் தனக்கென உரிய இடத்தைப் பிடித்துள்ளார். அரசியலுக்கப்பால் சிந்தித்து, சமூக நலனையே கண்ணாகக்கொண்டு கடமையாற்றியவர். பொத்துவில் பிரதேசத்துக்குச் செல்லும் போது வாய்ப்புக் கிடைத்தால் நான் அவரைச் சந்திக்கத் தவறுவதில்லை.
பல்கலாசாரப் பண்புகள், பழக்கங்கள் பொத்துவிலுக்குள் நுழைவதை தடுக்க முடியாதெனத் தெரிந்திருந்தவர் மர்ஹும் ஆதம் லெப்பை. இதனால், முஸ்லிம்களை மார்க்க வழியில் சரியாக வழிநடத்தி வந்தார்.
இறைவனின் நியதிக்குள் வாழும் பிறவிகளாக நாம் உள்ளதால், அல்லாஹ்வின் “கழாக்கதிரை” பொருந்திக்கொள்கிறேன். அன்னாரது நற்செயல்களை பொருந்திக்கொண்டு மறுமையில் இறைவன் உயரிடம் வழங்கவும் பிரார்த்திக்கின்றேன்.
அவரது இழப்பால் துயருறும் என்போன்ற அன்பர்கள், உறவுகள் மற்றும் குடும்பாத்தாருக்கு “அல்லாஹுத்தஆலா பொறுமையைக் கொடுப்பானாக! ஆமீன்..!”