இலங்கையின் கூட்டுறவுத் துறைக்கு நீண்ட கால வரலாறு உண்டெனினும் 1970 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியிலேயே கூட்டுறவுத் துறை புத்துயிர் அடையத் தொடங்கியது.
கூட்டுறவுத் துறை என்பது மக்களுடன் தொடர்புபட்ட ஓர் அரிய துறையாக உள்ளபோதும், அரசாங்கத்துடன் மிக நெருக்கமான உறவையும் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூட்டுறவுத்துறை வளர்ச்சி பெற்று வருவதை நாம் மறுக்க முடியாது.
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்த பின்னர், இலங்கையில் இயங்கிவரும் பெரும்பாலானா கூட்டுறவுச் சங்கங்கள் மாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் மத்திய அரசாங்கத்தின் கீழும் கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
மாகாண மட்டத்திலான ஆரம்ப கூட்டுறவு சங்கம், நாடளாவிய ரீதியிலான ஆரம்பக் கூட்டுறவுச் சங்கம், மாகாண மட்டத்திலான கூட்டுறவு சம்மேளனம், தேசிய மட்டத்திலான கூட்டுறவு அமைப்புக்கள் என்று கூட்டுறவுச் சங்கங்களை நாம் வகைப்படுத்த முடியும்.
கூட்டுறவுக் சங்கங்கள் மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும். அவர்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கக் கூடிய முறையான கட்டமைப்புக்களை பேண வேண்டும். குறிப்பாக நியாய விலையில் பொருட்களை வழங்கக் கூடிய அமைப்பாக அந்தச் சங்கங்கள் தொழிற்பட வேண்டும். எனவேதான் இந்தத் துறையில் ஈடுபடுவோர்க்கு கடன்களையும், விசேட சலுகைகளையும் வழங்குகின்றது. அண்மைக் காலங்களில் கோப் சிட்டி என்ற திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கோப்பெட் என்ற நிறுவனம் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக விளங்குகின்றது.
இலங்கையின் கூட்டுறவுத்துறை நமது நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மிகவும் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றது. அத்துடன் பன்முகப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும் சமூக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டக் கூடியதாகவும் அந்தத் துறை இயங்கி வருகின்றது. விவசாயம், காப்புறுதி, நுகர்வோரின் பாவனைப் பொருட்கள் மீன்பிடித் தொழில், வங்கி, மருத்துவம், ஆடை உற்பத்தி, போக்குவரத்து ஆகியவற்றுக்கு கூட்டுறவுத் துறை உத்வேகம் வழங்கி வருகின்றது.
கடந்த காலத்தில் கூட்டுறவுத் துறையில் நிலவி வந்த ஊழல்களும், சீர்கேடுகளும் தற்போது படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாகாண சபையுடன் இணைந்து மத்திய அரசாங்கம் இந்தத் துறையை வளர்ப்பதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கையை எடுத்து வருகின்றது என நான் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.