December 18, 2015
வெலிசறையில் அமைந்துள்ள சத்தோச நிறுவனத்தின் பாரிய களஞ்சிய சாலைக்கு நேற்றிரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அதிரடி விஜயத்தின் மூலம் பல குழறுபடிகளை கண்டறிந்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியிலிருந்து அமைச்சருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே அமைச்சர் ரிசாத் மேற்படி விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
களஞ்சிய சாலையில் பணியாற்றும் ஊழியர்களின் அசமந்தப்போக்கு ,நேரத்திற்கு சமுகமளிக்காமை, கடமை நேரத்தில் கடமையிலிருந்து விலகியிருத்தல் என்பனவற்றையும் அவர் தனது விஜயத்தின் போது கண்டறிந்தார்.
அத்துடன் நுகர்வோரின் பாவைனைக்கென சத்தோச நிறுவனங்களுக்கு அனுப்புவதற்காக அனுமதியைப் பெற்ற மாலைதீவு மாசிகளுக்கு பதிலாக ஹம்பாந்தோட்டை மாசியை அனுப்பி வருகின்றமை தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கண்டறிந்தார்.
களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொதிகளை அதிரடியாக திறந்து பார்த்த போதே இந்தக் குழறுபடிகளை அமைச்சர் கண்டறிந்தார்.
இதனையடுத்து சத்தோச நிறுவன உயர் அதிகாரிகளுக்கு பணிப்பை விடுத்த அமைச்சர், ஊழியர்களின் அசமந்தப்போக்கு, நேரத்திற்கு சமூகமளிக்காமை என்பவற்றிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததுடன் , பதவி தராதரம் பாராது நவடிக்கை எடுக்குமாறு உத்தரவும் பிறப்பித்தார்.
நுகர்வோருக்கான உணவுப்பொருட்களில் குழறுபடி ஏற்பட்டுள்ளமை குறித்து தனக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
சத்தோச நிறுவனம் கடந்த காலங்களில் நஷ்டத்திலே இயங்கிவந்தது. இனிவரும் காலங்களில் அந்நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்க பல திட்டங்களை புகுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் நுகர்வோருக்கு தரமான பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என்பதில் தான் மிகவும் கண்டிப்பாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாடுபூராகவுமுள்ள 51 சத்தோச கிளை நிறுவனங்களுக்கு இந்தக் களஞ்சிய சாலையலிருந்தே நுகர்வுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எச்.எம்.பூமுதீன்