குருநாகல் மாவட்டத்தில் கடந்த 15 வருடகாலமாக ஒரு சிறுபான்மை சமூகத்திற்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கான காரணங்கள் தொடர்பில் இப்பிரதேச தமிழ் பேசும் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென வேண்டுகோள்விடுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை கொண்டு உங்களால் ஏன் இதனை அடைந்து கொள்ள முடியாதுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
குருநாகல் மாவட்டத்தில் பானகமுவவவில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ரீதிகம பிரதேச சபையின் உப-தலைவர் எம் நவ்பல் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில்,கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளரும்,தர நிர்ணய கட்டுப்பாட்டு சபையின் தலைவர் கலாநிதி அனீஸ்,பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ்,தொழிலதிபர் அசாருதீன் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில்
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களும்,முஸ்லிம்களும் தமக்கான அனைத்து தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த மாவட்டத்தில் 15 பாராளுமன்ற பிரதி நிதிகள்,ஆளும் எதிர் கட்சிகளில் இருந்து பாராளுமன்றம் செல்கின்றனர்.ஆனால் 1 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்கள் இருக்கும் இந்த மாவட்டத்தில் தமக்கான ஒரு பாராளுமன்ற பிரதி நிதித்தவம் இழக்கப்படுவதற்கு காரணத்தை ஆராய்ந்தால்,அது எமக்கிடையில் காணப்படும் கட்சி ரீதியான பிளவகளே காணரமாகும்.இது மட்டுமன்றி எமது பிரதி நிதித்துவம் இல்லாமல் போனதால் எத்தனையே உரிமைகளை கூட எம்மால் அடைந்து கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் இங்குள்ள பாடசாலையின் தரமுயர்வு தொடர்பில் பேசப்பட்டது.அதனை கூட நாம் வாக்களித்தவர்கள் செய்து தரமுடியாதவர்களாக இருக்கின்றனர்.இந்த நிலை இனியும் ஏற்படக் கூடாது என்பதால் தான் நாங்கள் இன்று இந்த பிரதேச மக்களது எதிர்கால அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளோம்.அரசியல் பலம் என்பது இந்த மக்களுக்கும்,இப்பிரதேசத்திற்கும் பல்வேறு வகையில் உதவும் ஆயுதமாகும்.இதனை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
தேர்தல் காலங்களில் வந்து உங்களது வாக்குகளை பெற்றதன் பின்னர் மீண்டும் அடுத்த தேர்தலுக்கு வருபவர்களாக நாங்கள் இருப்பதில்லை.அனால் சில கட்சிகள் இதனை செய்கின்றன.இந்த அரசியல் மூலம் தேவையுள்ள மக்களுக்கு தேவைகளை அறிந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற கட்சியினை நாம் உருவாக்கினோம்.
இருக்கின்ற அரசாங்கத்துடன் பேசி மக்கள் நலன் திட்டங்களை நாம் செய்கின்றோம்.ஆனால் சிலர் மக்களிடத்தில் பிளவுகளை தோற்றுவிக்க முயல்கின்றனர்.பிழையான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.இதற்கு நீங்கள் அகப்பட்டுவிடுவீர்கள் எனில் அது இந்த பிரதேச மக்களுக்கு கிடைக்கும் அனைத்தையும் இல்லாமல் செய்தவிடும் என்றும் அமைச்சர் றிசாத பதியுதீன் கூறினார்.