காசாவில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறு கோரி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்று, இன்று காலை (14) கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கையளிக்கப்பட்டது.
இந்த மகஜரை கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், வீரசுமன வீரசிங்ஹ, பௌசி, ஹலீம், இஷாக் ரஹ்மான், ஹரீஸ், தௌபீக் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
மகஜரை கையளித்த பின்னர் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
“159ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்றை, இன்று (14) காலை கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கையளித்துள்ளோம். ஐ.நா பொதுச்செயலாளர் திரு.அன்டோனியோ குட்டெரஸ் அவர்களுக்கு முகவரியிட்ட இந்தக் கடிதமே இலங்கை தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளனர். எனினும், இந்த முயற்சி அவசரமாக மேற்கொள்ளப்பட்டதனால், அனைவரினது கையொப்பங்களையும் பெறமுடியாமல் போய்விட்டது.
இஸ்ரேலியர்களால் ஏவப்படும் ஏவுகணைகளும் பொழியப்பட்டு வரும் குண்டுகளும் காசாவில் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகின்றன. பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என்ற விவஸ்தையின்றி குண்டுகளை வீசி, இந்த அக்கிரமங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷிபா வைத்தியாசாலை மீதும் குண்டுகள் வீசப்பட்டு, அங்குள்ள நோயாளர்கள் வைத்தியர்கள் உட்பட மருத்துவ உதவியாளர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவே ஒரு மயான பூமியாக மாறியுள்ளது.
எனவே, யுத்த நிறுத்தத்தினால் மட்டுமே இந்த மக்களை காப்பாற்ற முடியும். எனவே, யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே, நாம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளோம்.
அதுமாத்திரமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த அராஜகத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு உதவக் கூடாது.
இந்த யுத்தத்தினால் 120க்கு மேற்பட்ட ஐ.நா ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகளில், 120 உலக நாடுகள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென பிரேரணை கொண்டுவந்த போதும், ஐ.நாவினால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.
அத்துடன், 54க்கு மேற்பட்ட முஸ்லிம் நாடுகளும் இந்த விவகாரத்தை கையிலெடுத்து, யுத்த நிறுத்தத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதேபோன்று, அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் (OIC) ஆகியவற்றுக்கும் மேற்குலக நாடுகளான பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கும் இந்த மகஜரின் பிரதியை அனுப்ப நடவடிக்கை எடுப்போம்” என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த மகஜரின் பிரதியொன்று இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருக்கும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:- மகஜரின் ஆங்கிலப் பிரதியும் தமிழ் மொழிபெயர்ப்பும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.