எனது மனசாட்சி படி கடந்த காலங்களில் சரியாக நடந்துள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த பாராளுமனற தேர்தலில் அதிகமான தமிழ் இளைஞர்கள் எனது வெற்றிக்கு பங்களிப்பினை செய்ததாகவும் கூறினார்.
தேசிய தொலைக்காட்சியான நேத்ரா தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிவரை இடம் பெற்ற வெளிச்சம் அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதே வேளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்துரைக்கும் போது:
வன்னி மாவட்ட மக்களுக்கு பணியாற்றுவதற்காக நாம் அரசியலுக்கு வந்துள்ளோம்.இன்று அதற்கான நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.கடந்த காலங்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் ஏதும் பேசியிருப்போம்.இன்று அவரது பணி எமது மக்களுக்கு தேவையாகவுள்ளது.எனவே எதிர்காலத்தில் எமது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள இணைந்து செயற்படுவோம்,தமிழர்களும்,முஸ்லிம்களும் தேசிய இனங்கள்,சிறுபான்மை சமூகம் என்று சொல்லுவதை எதிர்காலங்களில் தவிர்த்துக்கொள்வதன் அவசியத்தையும் செல்வம் அடைக்கலநாதன் இங்கு சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் வெற்றிக்கு தமிழ் மக்களும் வாக்குகளை அளித்துள்ளதை இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்துவதாக தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்,தனக்கு கிடைத்துள்ள குழுக்களின் பிரதி தலைவர் பதிவியினை வைத்து தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெறும் முயற்சியினையும் முன்னெடுக்கப் போவதாக கூறினார்.
நிகழ்ச்சியினை சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய தொலைக்காட்சியின் நேத்ரா மற்றும் செனல் ஜ அலைவரிசையின் நடப்பு விவகார பணிப்பாளருமான யூ.எல்.யாகூப் நெறிப்படுத்தினார்.