சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களு க்கும் இடையிலான நட்பினை சீர்குலைக்கும் முயற்சியில் ‘சேனாக்கள்’ என்ற பெயரில் செயற்பட்டு வரும் சதிகார கும்பல்கள் இந்த நாட்டைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம்களும் எக்காலத்திலும் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லையென்பதை புரிந்து கொள்ள வேண்டுமென கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேற்படி சதிகார கும்பல்கள் அண்மைக் காலமாக கொழும்பில் வாழும் சிறுபான்மையினரை நசுக்க முற்படுவதும் இவ் விடயங்கள் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்வது வேதனையளிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் வாழும் சிறுபான்மையின மக்களின் சமூக இணக்கத்தை மையமாகக் கொண்டே தமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன் முறையாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் www.aணீசீணீ.lk என்னும் இணைய தளத்தினை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று கொழும்பு 07 இலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதனையொட்டி நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டில் அமைதி நிலவுகின்ற இக்கால கட்டத்தில் இனங்களுக்கிடையே மீண்டும் கலவரத்தை உண்டுபண்ணவென சதிகார கும்பல்கள் தொடர்ச்சியாக பல திட்டங்களை தீட்டி வருகின்றன. தேவையான சந்தர்ப்பத்தில் இது குறித்து நாம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடங்களையே பள்ளிவாசல் என்றும் மத்ரஸா என்றும் அழைப்பார்கள். இங்கு அரசாங்கத்துக்கோ நாட்டுக்கெதிராகவோ மக்கள் கூடி சதித்திட்டம் தீட்டுவது கிடையாது. அப்படியே நடக்குமாகவிருந்தால் அதனை சாட்சிகளுடன் நிரூபித்துக் காட்டச் சொல்லுங்களெனவும் அமைச்சர் கூறினார்.

இஸ்லாமியராக பிறந்த நாம் ஒவ்வொருவரும் எக்காரணம் கொண்டும் எமது ஐந்து நேர தொழுகையை தவறவிடமாட்டோம். வீதியில் சென்றாலோ, கடையிலிருந்தாலோ விமானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் தொழுகையை செய்வோம். அதனை எந்த சேனாவாலும் தடுத்து நிறுத்த முடியாது.

எமது நாட்டின் அரசியலமைப்பின்படி எந்தவொரு மதத்தினருக்கும் தமது சமய நடைமுறைகளை சுதந்திரமாக பின்பற்றுவதற்கு அனுமதியுண்டு. அவை ஏதாவது ஒரு வகையில் இன்னுமொரு மதத்தினருக்கு இடைஞ்சலை ஏற்படுத்துமாயின் சட்ட விதிமுறைகளுக்கமைய வழக்கு தொடருங்கள். அதனை விடுத்து இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் மீதும், வியாபார ஸ்தானங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதனை இவர்கள் நிறுத்த வேண்டும்.

நாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நானும் யுத்த காலத்தில் அகதியாக இடம்பெயர்ந்து வந்தவன் தான். இதனால் மக்கள் பட்ட துன்பத்தை நான் அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என்ற வகையில் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டவர்களாக விட்டுக் கொடுப்புடன் வாழ வேண்டுமென்ப தையே நான் வலியுறுத்துகிறேன் எனவும் அமைச்சர் கூறினார்.

செய்தியாளர் மாநாட்டின் முன்னுக்கு பின்னாக பிரசாரம் செய்துவரும் ஹக்கீம் பற்றி என்ன நினைக்கிaர்கள் என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரிசாட் அவர் தேர்தல் காலத்தில் மாத்திரமே வீரராக செயற்படுவார். அதற்குப் பின்னர் வாக்குறுதியளித்த எதனையும் நிறைவேற்ற மாட்டார். அவர் இதுவரையில் முஸ்லிம்களு க்காகவோ இடம்பெயர்ந்த வர்களுக்காகவோ, பள்ளிவாசல்களுக் காகவோ எதுவும் செய்ததில்லையென்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்த விடயமெனவும் பதிலளித்தார்.

மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் கூடி முடிவு எடுத்துள்ளமைக்கமைய இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் தமது கட்சி தனித்தே போட்டியிடுமெனவும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *