உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ரிஷாட் பதியுதீன் விடுதலை
“பொய் குற்றச்சாட்டு சுமத்தி என்னையும் எமது சமூகத்தையும் அழிக்க முயற்சி செய்தார்கள்”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (02) குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபரின் ஆலேசானைக்கமைய, கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே அவர் நிரபராதி என குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கும் உத்தரவை வழங்கினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2021, ஏப்ரல் 24ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் CIDயினால் கைது செய்யப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த வருடம் ஒக்டோபர் 14ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்கத்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி என்னை மாத்திரமன்றி எமது சமூகத்தையே அழிக்க முயற்சி செய்ததாக குறிப்பிட்டார்.
இதேவேளை இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள ரிஷாட் பதியுதீன் எம்.பி, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் என்னையும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றம் சாட்டியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அநியாயமாக என்னை 07 மாதங்கள் விளக்கமறியலில் வைத்து அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறலாம் என்று நினைத்தார்கள்.
எவ்வாறாயினும், முதலாம் தவணை நிறைவடைவதற்கு முன்னரே இந்த நாட்டு மக்களால் துரத்தப்பட்ட அவர்கள் இன்று இறைவனின் கிருபையால், பயங்கரவாத தடைச்சட்ட வழக்கின் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். உண்மை வெல்லும், உடனடியாக அல்ல, நிச்சயமாக!