மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், 05/09/2016 அன்று மாலை, மலேசிய பிரதமர் அலுவலகத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அப்துல் ரஹ்மான் தஹ்லான் அவர்களைச் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்ததுடன், அன்சார் மீது நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குத் தனது வன்மையான கண்டனத்தையும் வெளியிட்டார்.
அத்துடன் 04/09/2016 அன்று மலேசிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பம் தொடர்பான காணொளிக் காட்சிகளை மலேசிய அமைச்சரிடம் காண்பித்த அமைச்சர் றிசாத், இலங்கை மக்களின் வேதனைகளை மலேசியப் பிரதமரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆயுதம் இல்லாமல் விமானநிலையத்துக்குள் புகுந்து, உயர்ஸ்தானிகர் ஒருவரை மிலேச்சத்தனமாகவும், வெறித்தனமாகவும், கோழைத்தனமாகவும் தாக்குதல் நடத்திய பத்துப்பேர் கொண்ட இந்தக் கும்பல், பேடித்தனமாக செயற்பட்டுள்ளமை மலேசிய அரசாங்கத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவர்களுக்கு வழங்கும் தண்டனை எதிர்காலத்தில் இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபட நினைப்போருக்கு ஒரு தகுந்த பாடமாக அமைய வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் தூதுவர் என்பது அந்த நாட்டின் ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும், மக்களின் பிரதிநிதியாகவுமே பணிபுரிகின்றார். அந்த வகையில் இந்தத் தாக்குதல் சம்பவத்தை அறிந்து எமது நாட்டு அரசாங்கமும், எமது மக்களும் மிகுந்த துயரத்துடன் இருக்கின்றனர்.
உயர்ஸ்தானிகர் அன்சார் நீண்டகாலமாக இராஜதந்திர சேவையில் இருந்து வருவதுடன் சவூதி அரேபியா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் தூதுவராக சிறப்பாகப் பணிபுரிந்து, இலங்கைக்கும் அந்தந்த நாடுகளுக்குமிடையில் உறவுப்பாலமாக விளங்கி, நன்மதிப்பைப் பெற்றவர் என்றும் அமைச்சர் றிசாத், மலேசிய அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இடையிலே நீண்டகாலமாக பொருளாதார, வர்த்தக ரீதியான உறவுகள் இருந்து வருகின்றன. அத்துடன் கலாசார ரீதியிலும் இரண்டு நாடுகளும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் மலேசியாவுக்கு வந்து, முதலீட்டுத் துறையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அதேபோன்று மலேசிய முதலீட்டாளர்கள் பலர் இலங்கையின் முதலீட்டுத்துறையில் ஈபடுவதுடன், பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் ஆர்வங்காட்டி வருகின்றனர். இதனால் இரு நாடுகளின் பொருளாதார உறவுகள் வலுவடைந்து, உயர்ந்த நிலையில் இருப்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
இவ்வாறான சம்பவங்களினால் மலேசிய – இலங்கை மக்களின் நீண்டகால உறவுக்குப் பாதகம் ஏற்படக்கூடாது என நாங்கள் விரும்புகின்றோம். எனவே, மலேசிய அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற துரதிஷ்ட சம்பவங்கள் இடம்பெறுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும், அத்துடன் இதுபோன்ற மோசமான செயற்பாடுகளினால் உங்களுடைய நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியவர்களுக்கும், எமது நாட்டின் உயர்ஸ்தானிகர் மீது இவ்வாறானதொரு நாசகார செயலை செய்தவர்களுக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுறுத்தினார்.