யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ் முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை மீண்டும் அந்த வீதிகளுக்கு மாற்றுவதற்கு உதவி புரியுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலண்டன் வாழ் யாழ் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டன் ஹரோ பள்ளிவாசலில் இலண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே வடமாகாண முஸ்லிம்கள் அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட யாழ்ப்பாண பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தை அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய போது,

அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலே இவ்வாறான தவறு ஒன்று நிகழ்ந்திருக்கலாம் எனவும் இது சம்பந்தமாக தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

மீளக்குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்களின் இன்னோரன்ன தேவைகள் குறித்து தாங்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதுடன் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் வளர்ச்சியில் மேலும் பங்களிப்புக்களை நல்க வேண்டுமெனவும் தாங்கள் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மௌலவி சுபியான் உட்பட யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் தான் எடுக்கும் முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை நல்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்ட இலண்டன் வாழ் முஸ்லிம்கள் தத்தமது பிரதேசங்களிலுள்ள பிரச்சினைகளை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *